Published : 21 Jan 2022 06:50 AM
Last Updated : 21 Jan 2022 06:50 AM

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை; 6.637 கிலோ தங்கம் சிக்கியது: ரூ.2.88 கோடி பறிமுதல்

கே.பி.அன்பழகன்

தருமபுரி

அரசு நிதியில் முறைகேடு செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராகவும், பாலக்கோடு தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருப்பவர் கே.பி.அன்பழகன். கடந்த அதிமுக ஆட்சியின்போது உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இவர் பதவியில் இருந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் அரசு நிதியில் முறைகேடு செய்து அதன்மூலம் தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாகவும், இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தான் அனுப்பிய மனு மீது விசாரணை நடத்தக் கோரியும் கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி, கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்தனர். தருமபுரி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களிலும், தெலங்கானா மாநிலத்திலும் கே.பிஅன்பழகன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் பெயரில் சொத்துகள் இருப்பதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவினர் திரண்டனர்

இந்நிலையில், கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில் உள்ள கே.பி.அன்பழகன் வீடு, பூலாப்பட்டி கிராமத்தில் வசிக்கும் கே.பி.அன்பழகனின் மகள் வித்யா வீடு, பொன்னேரி மற்றும் பெரியாம்பட்டி ஆகிய இடங்களில் செயல்படும் அன்பழகனுக்கு சொந்தமான கிரஷர் குவாரி, கெரகோடஅள்ளி பகுதியைச் சேர்ந்த அன்பழகனின் உறவினர் கே.டி.கோவிந்தன், அதே பகுதியைச் சேர்ந்த ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகர், தருமபுரி இலக்கியம்பட்டியில் உள்ள பாப்பிரெட்டிப் பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி வீடு, தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் வசிக்கும் அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் வீடு, தருமபுரி நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவி வீடு மற்றும் சேலம், சென்னை, தெலங்கானா ஆகிய இடங்களில் உள்ள அன்பழகன் தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய சோதனை இரவு 8 மணியை கடந்தும் நீடித்தது.

இந்த சோதனை குறித்து தகவல் அறிந்ததும் கே.பி.அன்பழகன் வீட்டின் முன்பாக கட்சியினரும், அவரது ஆதரவாளர்களும் திரண்டனர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும், வாக்குவாதத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் முல்லைவேந்தன், செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அடுத்தடுத்து அன்பழகன் வீட்டுக்கு வந்தனர். செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

ஆட்சி மாறும்போது இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானதுதான். பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் தொடர்ந்து 5 முறை கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார். தற்போது திமுக ஆட்சியில் அமர்ந்தபோதும் தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை அவர் வெற்றி பெறச் செய்துள்ளார்.

அதிமுக-வை தருமபுரி மாவட்டத்தில் அவர் வலிமையாக வைத்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மூலம் திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது. இதையெல்லாம் கே.பி.அன்பழகன் சட்டரீதியாக எதிர்கொண்டு, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்பதை நிரூ பிப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.2.88 கோடி, 6 கிலோ தங்கம்

சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் கே.பி.அன்பழகன் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, நேற்று அவர் தொடர்புடைய 58 இடங்களில் (தருமபுரி மாவட்டம்-53, சேலம்-1, சென்னை-3, தெலங்கானா மாநிலம்-1) சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரொக்கப்பணம், 6.637 கிலோ தங்க நகைகள், 13.85 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இதில் ரூ.2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 பணம் கணக்கில் காட்டப்படாதது என்பது தெரியவந்துள்ளது. மேலும், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற் றப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x