Published : 21 Jan 2022 07:42 AM
Last Updated : 21 Jan 2022 07:42 AM

கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம் உட்பட தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு: பணிகள் பிப்ரவரியில் தொடங்கும் என்று முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகளும், சங்ககால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண முன்களப் புல ஆய்வும் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கங்கைச் சமவெளியில் கி.மு.6-ம் நூற்றாண்டில் இருந்த நகரமயமாக்கம் தமிழகத்தில் இல்லை என்றும், பிராமி எழுத்து மவுரியர் தோற்றுவித்தது என்றும் இதுவரை கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருத்துகளுக்கு அறிவியல்பூர்வமாக விடை அளித்துள்ளது கீழடி ஆய்வு. தமிழகத்தில் கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்ததும், படிப்பறிவு, எழுத்தறிவு பெற்ற மேம்பட்டசமூகமாக விளங்கியதும் கீழடிஅகழாய்வு மூலம் நிலைநிறுத்தப்பட்டது.

சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு 1150 என கண்டறியப்பட்டுள்ளது. ‘தண் பொருநை’ என்ற தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அறிவித்தேன்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும்உள்ளடக்கி, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. பண்டைய தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022-ம் ஆண்டில் 7 இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட உள்ளன.

அதன்படி, கீழடி மற்றும் அதைசுற்றியுள்ள இடங்களில் (கொந்தகை, அகரம், மணலூர்) 8-ம் கட்டமாகவும், சிவகளையில் 3-ம் கட்டமாகவும், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறையில் 2-ம்கட்டமாகவும் அகழாய்வு பணிகள்நடக்க உள்ளன. வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் முதல்முறையாக அகழாய்வு நடக்க உள்ளது.

தண் பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்துக்கு எதிரேகடற்கரையோர முன்கள புலஆய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, சங்ககால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தை கண்டறியும் நோக்கில், கடலோரங்களில் ஆய்வு மேற்கொள்ள இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடக்க உள்ளன. இதற்காக வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5கோடி நிதியில் இருந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

புதிதாக அகழாய்வு மேற்கொள்ளப்படும் இடங்கள்

* துலுக்கர்பட்டி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ. தொலைவில் நம்பி ஆற்றின் இடது கரையில் உள்ளது துலுக்கர்பட்டி. இங்கிருந்து கண்ணநல்லூர் செல்லும்சாலையில் 2.5. கி.மீ. தொலைவில், இரும்பு மற்றும்தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த வாழ்வியல் மேடு காணப்படுகிறது. நம்பி ஆற்றின் கரையில் இரும்புக் காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இந்த அகழாய்வின் நோக்கம். இது சிவகளை, ஆதிச்சநல்லூருக்கு சமகாலக்கட்டமாகும்.

* வெம்பக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து தெற்கே 15 கி.மீ. தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் உள்ளது. இங்கு உள்ள தொல்லியல் மேட்டில் நுண் கற்காலம்முதல் இடைக்காலம் வரை மக்கள் தொடர்ந்துவாழ்ந்த அடையாளங்கள் காணப்படுகின்றன.

* பெரும்பாலை: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் பாலாறுஆற்றின் இடது கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் பெரும்பாலை. இங்குள்ள வாழ்விட மேடு தற்போதைய நிலவியல் அமைப்பில் இருந்து 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. காவிரியின் கிளை ஆறான பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக் கால பண்பாட்டின் வேர்களைத் தேடுவது இந்த அகழாய்வின் நோக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x