Published : 21 Jan 2022 08:23 AM
Last Updated : 21 Jan 2022 08:23 AM

திருமயம் அருகே சட்டவிரோத கல் குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: திருமயம் அருகே சட்டவிரோதமாக கல் குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த குமரவேலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருமயம் வளையன்வயல் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமம் குன்று புறம்போக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ராமையா, கருப்பையா ஆகிய இருவர், வளையன்வயல் கிராமத்தில் கல் குவாரி நடத்தி வருகின்றனர். இவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குவாரி நடத்தி வருகின்றனர்.

ராமையா மனைவி அழகு ஊராட்சி தலைவராக இருப்பதால் அவரும் நீர்நிலை அருகே சட்டவிரோதமாக கல் குவாரி நடத்திவருகிறார். இந்த குவாரி முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல்செய்தேன்.

நீதிமன்ற அவமதிப்பு புகார்

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சட்ட விரோதமாக குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போதும் குவாரி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அபராதத்தை வசூலிக்கவில்லை

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், சட்ட விரோதமாக குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.9கோடி அபராதம் விதிக்கப்பட்டுஉள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அபராதத் தொகை இதுவரை வசூலிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அபராதத் தொகையை வசூலிக்க வருவாய்த் துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்.2-ம்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x