

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்யக் கூறிவார்டன் திட்டியதாக, பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக விடுதியின் பெண்வார்டன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த17 வயது மாணவி ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூயஇருதய மேல்நிலைப் பள்ளியில்8-ம் வகுப்பில் இருந்து படித்துவந்தார். அவர், அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார்.
தற்போது பிளஸ் 2 படித்து வந்த அவர், ஜன.9-ம் தேதி விடுதியில் இருந்தபோது வாந்தி எடுத்துஉள்ளார். அப்போது, அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து உள்ளனர். இதுகுறித்து, மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஜன.15-ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது, மாணவியை பரிசோதித்த மருத்துவர்களிடம், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால், ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸார் அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்பு, அந்த மாணவி நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாணவி அளித்திருந்த புகாரின்பேரில், வார்டன் சகாயமேரியை(62) போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பாஜகவினர் சாலை மறியல்
இதனிடையே, மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாவட்டச் செயலாளர் ஜெய்சதீஷ் உட்பட 50-க்கும் அதிகமானோர் திரண்டு, “மாணவியை மதம் மாற செய்ய வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே தற்கொலை வழக்கை மாற்றி விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதனால் நேற்று மாலை வரை மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. தொடர்ந்து மாணவியின் இறப்புக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பாஜகவினர் மருத்துவக் கல்லூரி சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக மாணவியின் பெற்றோர் மற்றும் பாஜகவினர் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியாவிடம் புகார் மனு அளித்தனர். இதேபோல, அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகில் பாஜக கிழக்கு ஒன்றியத் தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வலைதளங்களில் பரவும் வீடியோ
இதனிடையே, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வந்த போது, அவரிடம் ஒருவர் விசாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில்,
மாணவி: ஒருமுறை என் அப்பா, அம்மாவிடம், ‘உங்க பொண்ணை நான் கிறிஸ்டினா மாற்றிவிடவா?, நானே படிக்க வச்சுக்கவா?’ அப்படின்னு கேட்டாங்க. அதுலருந்தே என்னை திட்டிக்கிட்டே இருப்பாங்க. எங்கயும் தங்கக் கூடாது என சொல்வாங்க.
கேள்வி கேட்கும் நபர்: யார் கேட்டது?
மாணவி: ராக்கேல் மேரி.
கேள்வி கேட்கும் நபர்: இது எப்போ நடந்தது?
மாணவி: ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி.
கேள்வி கேட்கும் நபர்: அதனால்தான் உன்னை தொந்தரவு செய்தார்களா?
மாணவி: இருக்கலாம்
இவ்வாறு அந்த வீடியோவின் உரையாடல் அமைந்துள்ளது.