ஈரோட்டில் வேகமாக பரவும் கரோனா 3-வது அலை சிறைக்கைதிகள், காவல்துறையினருக்கு தொற்று

ஈரோட்டில் வேகமாக பரவும் கரோனா 3-வது அலை சிறைக்கைதிகள், காவல்துறையினருக்கு தொற்று
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. மூன்று சிறைக்கைதிகள், 30 காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கரோனா மூன்றாவது அலை தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலையைக் காட்டிலும் தற்போது நாள்தோறும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 7-ம் தேதி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது. அடுத்தடுத்த நாட்களில் எண்ணிக்கை அதிகரித்து தற்போது நாள் ஒன்றுக்கு 906 பேர் பாதிக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கரோனா தொற்றால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ள 20 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவோரை, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

முன்களப்பணியாளர்களாக பணிபுரியும் காவல்துறையைச் சேர்ந்த 30 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பாதிப்பு அதிகமில்லை எனத் தெரிவித்த சுகாதாரத்துறையினர், பெரும்பாலானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதேபோல், ஈரோடு கிளைச்சிறையில் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேற்று 919 பேர்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 919 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 406 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4465 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in