

ஊழல் பற்றி பேச திமுக வுக்கு உரிமை இல்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அதிமுக துணை ஒருங்கிணைப் பாளரும், முன்னாள் அமைச் சருமான கே.பி.முனுசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக-வினரை சிறுமைப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசு லஞ்ச ஒழிப்பு போலீஸார் மூலம் சோதனை நடத்தி வருகிறது. அந்த வரிசையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் தற்போது சோதனை நடத்தி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தோல்வி அடைந்ததை மக்களிடம் இருந்து மறைக்கவும், திசை திருப்பவும் முயன்று வருகின்றனர்.
திமுக தனது முதல் மற்றும் இறுதி எதிரியான அதிமுக-வை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
அரசியலுக்கு வரும் முன்பே கே.பி.அன்பழகன் குடும்பம் பாரம்பரியமாக தொழிலில் ஈடுபட்ட செல்வந்தர் குடும்பம். 3 தலைமுறையாக தொழில் செய்து வரும் அவர்களை, ஆட்சியாளர்களின் நிர்பந்தத் தால் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை செய்கின்றனர்.
இது கண்டனத்துக்கு உரிய செயல். ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கிய பொருட்களின் சில்லரை விற்பனை மதிப்பு ரூ.350-க்குள் அடங்கி விடுகிறது. ஆனால், அரசு கணக்கீட்டின்படி ஒரு தொகுப்புக்கு ரூ.570 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ரேஷன் அட்டையின் பெயரிலும் ரூ.275 ஊழல் நடந்துள்ளது.
இதை மறைக்க தற்போது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மூலம் சோதனை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஊழலுக்கு வித்திட்டவர்களே திமுக-வினர் தான்.
எனவே, ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கும், அதன் தலைவர் களுக்கும் உரிமை இல்லை. எந்த வழக்கு போட்டாலும் அவற்றை சட்டப்படி எதிர்கொள்வோம்.இவ்வாறு கூறினார். பேட்டியின் போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கிருஷ்ணகிரி எம் எல் ஏ-வுமான அசோக்குமார், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.