Published : 06 Apr 2016 08:04 AM
Last Updated : 06 Apr 2016 08:04 AM

முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிமுக வேட்பாளர்கள் இன்று சந்திப்பு

மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு



அதிமுக வேட்பாளர்கள் 227 பேரும் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர். அதேநேரம் சில தொகுதிகளின் வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வந்துள்ளது.

அதிமுகவில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்தனர். இதில், தமிழகத்தில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் 2 கட்டங்களாக நடந்தது. கடந்த வாரம் நேர்காணல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென 227 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

பட்டியல் நேற்று முன்தினம் வெளியானதுமே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்ந்து, நேற்று காலை அமைச்சர் வளர்மதி உட்பட சில தொகுதிகளின் வேட்பாளர்கள் பூங்கொத்துக்களுடன் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தனர். அவர்களிடம் பூங்கொத்துக்களை முதல்வர் இல்லத்தில் பணியாற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, அவர்களை இன்று வருமாறு கூறியனுப்பியுள்ளனர். மேலும் வேட்பாளர்களுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இன்று வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர்.

வேட்பாளர்களை மாற்ற கோரிக்கை

இதற்கிடையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒரு சிலரை மாற்ற வேண்டும் என தலைமைக்கு கோரிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், சேலம், நெல்லை, திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் சில தொகுதிகளின் வேட்பாளர்கள் தொடர்பாக கட்சித் தலைமையிடம் வேட்பாளர் நேர்காணலின் போதே அப்பகுதிகளில் உள்ள அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டரில் பிரச்சாரம்:

அதிமுக சார்பில் முதல்வரின் பிரச்சாரப் பயணத்துக்காக ஹெலிகாப்டருக்கு அனுமதி கேட்டு, தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. அதிமுக சார்பில் தற்போது 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, வரும் சனிக்கிழமை 9-ம் தேதி முதல், மே மாதம் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 14 இடங்கள், புதுச்சேரியில் ஒரு இடம் என 15 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ஒவ்வொரு பகுதியிலும் ஓரிரு நாட்கள் இடைவெளிவிட்டு பிரச்சாரம் மேற்கொள்வதால், அவர் சென்னை வந்து செல்வார் என கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்துக்காக ஹெலிகாப்டரை பயன்படுத்தினால், தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வகையில், தமிழகத்தில் இதுவரை அதிமுக சார்பில் 18-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. விண்ணப்பம் தற்போது ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x