

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று காலை முப்படை வீரர்கள் மற்றும் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனவரி 20, 22 மற்றும் 24-ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த 3 நாட்கள் மற்றும் வரும் 26-ம் தேதி மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விழா நடைபெறும் தினம் மற்றும் ஒத்திகை நடைபெறும் நேரத்தில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசு தின விழாவுக்கான முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நேற்று காலை மெரினா காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே நடைபெற்றது. ஆளுநர், முதல்வர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வதுபோலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாத்தியங்கள் இசைப்போரும் பங்கேற்றனர். அலங்கார ஊர்திகளும் கலந்துகொண்டன. நாளை (ஜன. 22) இரண்டாம்கட்ட ஒத்திகை நடைபெற உள்ளது.