

சென்னை: நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஹரி நாடார், பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக வீடியோக்களை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி, 2020 ஜூலை மாதம் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி, சீமானுக்காக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாகவும், இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், முதல்கட்டமாக வழக்கு ஒன்றில் சிக்கி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரி நாடாரை கைது செய்தனர். பின்னர், அவரை நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஹரி நாடார் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், ஹரி நாடாரை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.