Published : 10 Apr 2016 01:19 PM
Last Updated : 10 Apr 2016 01:19 PM

படிப்படியாக மதுவிலக்கு: ஜெ.அறிவிப்புக்கு ஸ்டாலின், அன்புமணி கருத்து

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் படும் என்று சென்னையில் நடந்த அதிமுக தேர்தல் கூட்டத்தில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு மற்ற அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனம் வைத்தனர்.

திமுக பொருளாளர் ஸ்டாலின்:

மக்களை ஏமாற்றுகிற வகையில் அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதுதான் என்னுடைய கருத்து, அவர்களுடைய பேச்சை விவாதிக்க நான் எனது நேரத்தைச் செலவிட விரும்பவில்லை.

அன்புமணி ராமதாஸ்:

கடந்த மாதம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு சாத்தியமேயில்லை என்று கூறிய ஜெயலலிதா, இப்போது பயந்து விட்டார்கள். தேர்தல் பயம் வந்து விட்டது, பெண்களெல்லாம் மிகப்பெரிய கோபத்தில் இருக்கின்றனர். குடும்பங்கள் எல்லாம் இன்று மதுவை ஒழிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு எதிராக வாக்களிக்க குடும்பங்கள் முடிவு செய்து விட்ட காரணத்தினால்தான், பயத்தினால்தான் பொய்யான ஒரு உறுதியைக் கொடுத்திருக்கின்றார்.

தொல்.திருமாவளவன்:

மதுவிலக்கைப் பற்றி அதிமுக பேச முனைந்திருப்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே இதனை வரவேற்கிறோம். மதுவிலக்கைப் பற்றி பேசாமல் மக்களை சந்திக்க முடியாது என்ற நெருக்கடிக்கு முதல்வர் ஆளாகியிருக்கிறார். இந்தப் பேச்சு அதைத்தான் உணர்த்துகிறது. படிப்படியாகத்தான் நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறுவது ஏற்புடையதல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

தேர்தல் மே மாதம் நடக்கவிருக்கிறது, வாக்குகளை பெற வேண்டும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நப்பாசையில் இப்படிக் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகளல்ல, ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்புவார்கள். மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற்று பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x