

தாம்பரம்/ஆலந்தூர்: செங்கை, காஞ்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுகவில் சுமார்7,000 பேர் விருப்பமனு அளித்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளுக்கும் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து விருப்பமனு பெறும் நிகழ்ச்சி தாம்பரம், பம்மல், கூடுவாஞ்சேரி மாங்காடு, குன்றத்தூர் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்றன.
இதில் மாநகராட்சி பகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், நகராட்சி பகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரமும் விருப்பமனு கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் தி.க.பாஸ்கரன் மற்றும் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டி.எஸ்.எம்.ஜெயகரன், குன்றத்தூர் நகராட்சிக்கு தொமுச பேரவை செயலாளர் இரா.பொன்னுரங்கம், மாங்காடு நகராட்சியில் பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நா.கோபால், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பையனூர் சேகர் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் சுமார் 7 ஆயிரம் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்
திமுக சார்பில், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குபோட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.
காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தா.மோ. அன்பரசன், ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் சந்திரன், வடக்கு பகுதி செயலாளர் குணாளன் ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர். காலை தொடங்கி முற்பகல் வரை நேர்காணல் நீடித்தது.