

திருச்சி மாநகரில் 36 இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார ஆரோக்கிய மையங்களும், 2 இடங்களில் தொற்று நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை ஆய்வகங்களும் அமையவுள்ளன.
திருச்சியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பீமநகர், கீழரண்சாலை, இருதயபுரம், பெரிய மிளகுபாறை, ரங்கம், சுப்பிரமணியபுரம், தெப்பக்குளம், தென்னூர், உறையூர், திருவானைக்காவல், எடமலைப்பட்டிப்புதூர், காமராஜ் நகர், காந்திபுரம், ராமலிங்கநகர், மேல கல்கண்டார்கோட்டை, பீரங்கிக்குளம், காட்டூர், திருவெறும்பூர் ஆகிய 18 இடங்களில் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இந்தநிலையில், 15-வது மாநில நிதிக் குழு நிதியின் கீழ் தலா ரூ.25 லட்சத்தில் திருச்சி மாநகரில் 36 இடங்களில் புதிதாக ஆரம்ப சுகாதார ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், கோ-அபிஷேகபுரம் கோட்டம் உறையூர், அரியமங்கலம் கோட்டம் கீழரண்சாலை ஆகிய இடங்களில் தலா ரூ.22 லட்சத்தில் தொற்று நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை ஆய்வகங்களும் கட்டப்படவுள்ளன. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் அளிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: திருச்சி மாநகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். 2 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், ஒருவர் மட்டுமே பணியாற்றுவதால், நோயாளிகளுக்கு ஏற்படும் காலவிரயத்தைத் தவிர்க்கும் வகையிலும், உடனடியாக சிகிச்சை கிடைக்கும் வகையிலும் ஏற்கெனவே உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எல்லையில் இருந்து 2 கிமீ தொலைவுக்குள் புதிதாக ஆரம்ப சுகாதார ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படவுள்ளன. முன்னதாக, யோகா உள்ளிட்ட உடல்நல பயிற்சி அளிக்கும் மையங்களாக அறிவிக்கப்பட்ட இந்த மையங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 2 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்மூலம் மாநகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றில் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்கும். மேலும், தேவைப்படுவோருக்கு யோகா, உடற்பயிற்சியும் அளிக்கப்படும்.
2 இடங்களில் ஆய்வகம்
திருச்சி மாவட்டத்தில் சேகரிக்கப்படும் தொற்று நோய்களுக்கான மாதிரிகள் அனைத்தும் மணப்பாறையில் உள்ள மாவட்ட பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. இந்தநிலையில், மாநகராட்சியில் 2 இடங்களில் தொற்று நோய்களுக்கான பரிசோதனை ஆய்வகங்கள் அமையவுள்ளதால், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருத்துவ பரிசோதனை முடிவுகள் மக்களுக்கு உடனடியாக கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டிவைக்கவுள்ளனர் என்றனர்.