Published : 28 Apr 2016 08:21 AM
Last Updated : 28 Apr 2016 08:21 AM

உணர்ச்சிவயப்படுவது வைகோவின் பலவீனம் அல்ல.. பலமே: மதிமுக அமைப்பு செயலாளர் விளக்கம்

உணர்ச்சிவயப்படுவது வைகோவின் பலமே தவிர பலவீனமல்ல என்று மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொட்டதற்கெல்லாம் உணர்ச்சிவயப்படுகிறார் வைகோ என்று சிலர் விமர்சிக்கின்றனர். அது எங்கள் தலைவரின் பலமே தவிர, பலவீனம் அல்ல. மடியில் கனம் இல்லாதவர்களுக்கு, நேர்மையாளர்களுக்கு, குற்றம் குறை இல்லாதவர்களுக்கு அக்கிரமங்களைக் கண்டால் கொதித்து கொந்தளித்து எழுவது என்பது இயற்கைதான். தங்களை சமரசப்படுத்திக்கொண்டு மவுன சாட்சியாய் துரோகத்துக்கு துணை போகிறவர்கள்போல, அமைதியாய் அடங்கிக் கிடக் காதது வைகோவின் குணம்தானே தவிர, குற்றம் அல்ல.

அண்மையில் டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகளின் எண்ணிக்கையை அரசு உயர்த்தாததால் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றதே, நீதிபதிகளின் பணிச்சுமை மிகுந்து கிடக்கின்றதே என்ற கவலையில் கண்ணீர்விட்டு அழுத காட்சியை நினைவில்கொள்ள வேண்டும். எனவே, உணர்ச்சிவயப்படுவது கொடிய குற்றம் அல்ல.

இப்படி உணர்ச்சிவசப் படுவதால் வைகோவை நம்பி வந்தவர்களின் அரசியல் வாழ்க்கை

தரிசாகிக் கொண்டிருப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. பொதுவாழ்க்கையில் நுழைந்து தூண்டில் மீனைப் போட்டு, திமிங்கலங்களைப் பிடிக்க வேண்டும். ஊரை அடித்து உலையில் போட வேண்டும். எந்த வேலை செய்தாவது வயிறு கழுவ வேண்டும் என்று லாப நட்டக் கணக்கு போடக்கூடியவர்களை எல்லாம் மதிமுகவில் இருந்து கருணாநிதி தன்பக்கம் ஈர்த்துவிட்டார். இப்போது வைகோ பின்னால் அணிவகுத்து நிற்கும் தொண்டர்கள், தோழர்கள், சகாக்கள் அனைவரும் லட்சிய வேட்கை கொண்டவர்கள். தேர்தல் தோல்விகளை காரணம் காட்டி, வார்த்தை ஜாலங்களை அறிவுரைகளாக அள்ளி வீசி, ஏமாற்றும் பணி என்றைக்கும் எங்களிடம் எடுபடாது.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x