Published : 21 Jan 2022 10:33 AM
Last Updated : 21 Jan 2022 10:33 AM

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைப்பு

கும்பகோணம்

குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிச.8-ம் தேதி குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பொதுமக்கள் உட்பட இந்தியா முழுவதும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பேர் பவுண்டேஷன் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 120 கிலோ எடையில் அவரது மார்பளவு ஐம்பொன் சிலையை தயாரித்து, அதை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து, கும்பகோணம் நாகேஸ்வரன்கோயில் வீதியில் உள்ள சிற்பக் கூடத்தில் ஐம்பொன்னாலான பிபின் ராவத் சிலை தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டமாக களிமண்ணில் அவரது உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிலையை தயார் செய்ய ஏற்பாடு செய்துள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், இறுதி வடிவம் பெற்று வரும் பிபின் ராவத் சிலையை, நேரில் பார்வையிட்டு சில திருத்தங்களை ஸ்தபதி களிடம் தெரி வித்து, சீர்செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் எஸ்.பாபு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறும்போது, ‘‘முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு மரியாதை செய்யும் விதமாக, முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு ஐம்பொன் சிலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். பிப்ரவரி 2-வது வாரத்தில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவுபெறும்.

பின்னர், பிபின் ராவத் சிலையுடன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து புறப்பட்டு, 8 மாநிலங்கள் வழியாக மக்களுக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் விதமாக யாத்திரையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், டெல்லி இந்தியா கேட் போர் நினைவுச் சின்னம் அருகில் பிரதமர் மோடியிடம் இந்த சிலையை அளிக்க உள்ளோம்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x