

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்து குமரன். திமுக பிரமுகர். இவரது மனைவி சரிதா சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு (1-வது வார்டு) வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மாவட்ட கவுன்சிலரான சரிதாவை திமுகவினர் புறக்கணிப்பதாகவும், எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள திமுகவினரே எதிர்ப்பு தெரிவிப்பதாக முத்துக் குமரன் குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கிடையே, ஆம்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் வில்வநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தனக்கும், மாவட்ட கவுன்சிலரான தனது மனைவி சரிதாவுக்கும் மிரட்டல் விடுப்பதாக கூறி காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் கட்சி நிர்வாகி களிடம் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பிரமுகர் முத்துக்குமரன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை) ஆகியோர் குறித்து வாட்ஸ் -அப்பில் அவதூறு தகவல் ஒன்றை நேற்று முத்துகுமரன் பதிவிட்டுள்ளார்.
இது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்டித்தும், முத்துகுமரனை கைது செய்யக்கோரி, நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி தலைமையில், 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆம்பூர் அருகே பேரணாம்பட்டு -நரியம்பட்டு பிரதான சாலையில் நேற்றிரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் சாந்தலிங்கம் (திருப்பத்தூர்), சுரேஷ்பாண்டியன் (வாணியம்பாடி), சரவணன் (ஆம்பூர்) மற்றும் உமாபராத் காவல் துறையினர் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். முத்துகுமரனை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என திமுகவினர் கூறியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், முத்துகுமரனை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக எஸ்.பி., பாலகிருஷ்ணன் உறுதியளித்ததால் திமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் பேரணாம்பட்டு -நரியம்பட்டு சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுதொடர்பாக உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துகுமரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.