Last Updated : 20 Jan, 2022 06:45 PM

 

Published : 20 Jan 2022 06:45 PM
Last Updated : 20 Jan 2022 06:45 PM

புற நோயாளிகளுக்கான வாயில் கதவை இழுத்து மூடிய ஜிப்மர்: தமிழக நோயாளிகள் தவிப்பு

புதுச்சேரி: மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற ஆளுநர் உத்தரவை மீறி, கரோனாவைக் காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகம் வாயில் கதவை இழுத்து மூடியதால் தமிழகத்தில் இருந்து வந்தோர் பாதிக்கப்பட்டார்கள். அதேநேரத்தில் ஜிப்மரில் தற்போது 49 பேர் மட்டுமே கரோனா சிகிச்சையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மருக்கு, புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வருவார்கள். இச்சூழலில் கடந்த 18-ம் தேதி முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக ஜிப்மர் அறிவித்தது. தொலைபேசி எண்ணில் நோயாளிகள் பேசி முன்பதிவு செய்தால் ஒவ்வொரு துறையிலும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு எடுத்தது. ஏற்கெனவே இம்முறையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளான சூழலில், தற்போது மீண்டும் இம்முறை அமலாக்குவதற்கு மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். கரோனா சூழலில் தொடர் சிகிச்சையில் இருக்கும் பலரும் ஜிப்மரின் இம்முடிவுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக புகார் தெரிவிக்கத் தொடங்கினர்.

இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஜிப்மர் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார். அதற்கு ஜிப்மர் நிர்வாகத் தரப்பு, "ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு முற்றிலுமாக மூடப்படவில்லை. ஆனால், கரோனா நோயாளிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், ஒரு துறைக்கு 50 பேர் வீதம் முன்பதிவு செய்து வரும் நோயாளிகள் அனுமதிக்கப்படுவர்" என்று குறிப்பிட்டது.

இதையடுத்து ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஆளுநர் தமிழிசை பிறப்பித்த உத்தரவில், "பொதுமக்கள் பாதிப்பு அடையும் அளவிற்குப் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை மூடக்கூடாது. பொதுமக்களுக்கான மருத்துவ சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் வழிமுறைகளைக் கையாள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்திலிருந்து ஏராளமானோர் இன்றும் வந்தனர்‌. வாயில் கதவு இழுத்து மூடப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நிர்வாக உத்தரவுப்படி வாயில் கதவு மூடப்பட்டதாகவும் ஆன்லைனில் பதிவு செய்தால்தான் அனுமதிக்க முடியும் என்றும் பாதுகாவலர்கள் மைக்கில் அறிவித்தனர். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமான நோயாளிகள் ஜிப்மர் முடிவால் பரிதவித்துப் போனார்கள். ‌

ஜிப்மர் நிர்வாகம் வாயில் கதவை இழுத்து மூடியதால் தமிழகத்தில் இருந்து வந்தோரும் பாதிக்கப்பட்டார்கள். சுகாதாரத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "தற்போது ஜிப்மரில் 49 பேர் மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x