பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஊழல்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

ஹெச். ராஜா | கோப்புப் படம்.
ஹெச். ராஜா | கோப்புப் படம்.
Updated on
1 min read

கோவை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.

கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று கலந்துகொண்டபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500-ஐ மாநில அரசு அளித்தது. அப்போது அந்தத் தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று கோரிய இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் அளித்துள்ளார். அந்தத் தொகுப்பில் மிளகுக்கு பதில் இலவம் பஞ்சு கொட்டை, மிளகாய்த் தூளுக்கு பதில் மரத்தூள், பல்லி, சிரஞ்சு ஆகியவை இருந்தன. முழுக்க முழுக்க கலப்படமான பொருட்களை வழங்கியுள்ளனர்.

பொங்கல் தொகுப்பு வழங்க செலவிடப்பட்ட ரூ.1,800 கோடியில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. எனவே, இந்த ஊழல் ஆட்சியைப் புரிந்துகொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு டெல்லியில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை. எனவே, மத்திய அரசுக்கோ, அரசியலுக்கோ இதில் தொடர்பு இல்லை. இருப்பினும், பொங்கல் தொகுப்புக் கொள்ளையை மறைக்கவும், மக்களை திசை திருப்பவும் திமுகவினர் நடத்தும் நாடகம் இது.

காங்கிரஸ் மத்தியிலும், திமுக மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது ஏன் இவர்கள் குரல் எழுப்பவில்லை. மொழி, மதம், சாதி, இன வெறுப்புதான் திமுகவின் அடிப்படை. யாரோ ஒருவர் வெறுப்பை மூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் இவர்களுக்குத் தூக்கம் வராது.''

இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in