விழுப்புரத்தில் லாரி மோதி பெரியார் சிலை சேதம்

விழுப்புரத்தில் லாரி மோதி பெரியார் சிலை சேதம்
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரத்தில் நள்ளிரவில் சரக்கு லாரி மோதி பெரியார் சிலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் காமராஜர் வீதியில் கடந்த 40 ஆண்டுகளாக பெரியார் சிலை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மகாராஷ்டிர மாநிலப் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று புதுச்சேரியிலிருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது, காமராஜர் வீதியில் சரக்கு வாகனம் வளைந்து சென்றபோது, சாலையில் இருந்த பெரியார் சிலையின் பீடத்தின் மீது மோதியதால், பீடத்தோடு பெயர்ந்து பெரியார் சிலை கீழே விழுந்தது.

இதையறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பாஜகவினரின் சதியால் பெரியார் சிலை உடைக்கப்பட்டதாகவும், லாரி ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும் எனவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சம்பவ இடத்திற்குச் சென்று, பார்வையிட்டு, பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தினார். இதையடுத்து லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரையும் விசாரணைக்காகக் காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

பெரியார் சிலை சேதம் தொடர்பாகப் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in