

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 663 இடங்களில் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒன்றியப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு முகாம்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை 160 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் செலுத்தப்படுகிறது. இன்று 21 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது மாநகராட்சி தடுப்பூசி முகாமில் மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டுசென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி இயக்கமாக நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு முகாமிலும் 15 லட்சம் முதல் 30 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.