தஞ்சை: வார்டன் ஹால்டலில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய சொல்லியதால் மாணவி தற்கொலை

தஞ்சை: வார்டன் ஹால்டலில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய சொல்லியதால் மாணவி தற்கொலை
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வார்டன் ஹால்டலில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய சொல்லியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் லாவண்யா (17). கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் லாவண்யாவை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 8ம் வகுப்பில் சேர்த்து இருந்தனர். தற்போது 12ம் வகுப்பில் படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் லாவண்யா தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி லாவண்யா வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகள் லாவண்யாவை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவி லாவண்யாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி லாவண்யா, தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவி லாவண்யாவிடம் வந்து விசாரித்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா இறந்து விட்டார். இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in