

சென்னை: சென்னை அண்ணா நகர் கிளப் ஒரு மாதத்திற்குள் வாடகை பாக்கி 52 லட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வாடகைத் தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் அந்த கிளப்பை அப்புறப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில் செயல்பட்டுவரும், அண்ணா நகர் கிளப்பில் மதுபான கூடத்திற்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வீட்டு வசதி வாரியம் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முதலில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியது. இதனை எதிர்த்து அண்ணாநகர் கிளப் செயலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நிலுவையில் இருந்த 52 லட்சத்து 25 ஆயிரத்து 960 ரூபாய் வாடகை பாக்கியில் 20 லட்ச ரூபாயைச் செலுத்துவிட்டதாகவும், இருப்பினும் எஞ்சியிருக்கும் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் கிளப் செயல்படுவதால், அதனுடைய விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும். அதன் விதிகளை மீறி மனுதாரர் எந்த அனுமதியும் கோர முடியாது. அவ்வாறு விதிமுறைகளை மீறிச் செயல்படுவது கண்டறியப்பட்டால் கிளப்பை அப்புறப்படுத்தலாம். பார் செயல்படுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அனுமதி அளிக்கச் சட்டத்தில் இடமில்லை.
மேலும், 7 கிரவுண்டில் செயல்பட்டு வரும் கிளப்புக்கு வாடகையாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய சந்தை மதிப்புப்படி உரிய வாடகையை நிர்ணயிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பதால் அதற்கு ஏற்படும் வருவாய் இழப்பு தமிழக அரசுக்கான வருவாய் இழப்பு. நிலுவை வாடகையைச் செலுத்தத் தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கையை கிளப் நிர்வாகம் சந்திக்க நேரிடும்.
எனவே நியாயமான வாடகையை நிர்ணயித்து, நிலுவையில் உள்ள வாடகைத் தொகையைக் கணக்கிட்டு அதனை 30 நாட்களில் கிளப் நிர்வாகத்திற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கடிதம் கிடைத்ததில் இருந்து நான்கு வாரங்களுக்குள் நிலுவைத் தொகையை கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும். வாடகைத் தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் கிளப்பை காலி செய்வது, நிலுவைத் தொகை மற்றும் அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேற்கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.