Published : 20 Jan 2022 06:06 AM
Last Updated : 20 Jan 2022 06:06 AM

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மயில் சிலை மாயமான வழக்கு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள புன்னைவனநாதர் சந்நிதியில் இருந்த லிங்கத்தை மலரால் பூஜிக்கும் வகையில் மயில் சிலை ஒன்று இருந்தது. ஆனால், கடந்த 2004-ம்ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்ட பிறகு அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இது ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே, புதிய சிலையைஅகற்றி விட்டு, ஏற்கெனவே உள்ள மயில் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தவும், இந்தக் கோயிலை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்யவும் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள் அடங்கியகுழுவை நியமிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலைமாயமானதாக கூறப்படும் 2004-ம்ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான ஆவணங்கள், 2009-ம் ஆண்டில் அழிக்கப்பட்டு விட்டதாக அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிபி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மயில் சிலைமாயமானது தொடர்பாக இதுவரைஎந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மாயமான மயில் சிலை இன்னும்மீட்கப்படவில்லை என்றும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துபுலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஒரிஜினல் மயில் சிலை மாயமானது குறித்த விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தை ஏற்க முடியாது. வாயில் மலரைக் கொண்டு பூஜிக்கும் மயில் சிலையை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்’’ என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், பழைய சிலை மாயமானது குறித்த புலன் விசாரணை மற்றும் உண்மை கண்டறியும் விசாரணை ஆகியவற்றின் தற்போதைய நிலைகுறித்த அறிக்கையை தமிழக அரசும், அறநிலையத் துறையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x