Published : 20 Jan 2022 06:03 AM
Last Updated : 20 Jan 2022 06:03 AM

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று தொடக்கம்; எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜன.27-ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு27-ம் தேதி தொடங்கவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டு, கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குவதாக தெரிவித்தார்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7,217பேர் இடம்பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 11 இடங்களை அரசு மருத்துவர்கள் பிடித்துள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுஇடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,929 இடம்பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியல்கள் https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

இளநிலை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு 436 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

அதேபோல், பிடிஎஸ் படிப்பில் 1,930 இடங்கள் உள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 98 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மொத்தம் 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

முதல்முறையாக ஆன்லைனில்..

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்வரும் 24-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. தொடர்ந்து, 27-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28, 29-ம் தேதிகளில்,அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கவுள்ளது. இந்த 3 நாட்களில் குறைந்த அளவில் மாணவர்கள் பங்கேற்பதால் நேரடியாக கலந்தாய்வு நடைபெறும். 30-ம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்ப தால், முதல் முறையாக ஆன்லை னில் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x