Published : 20 Jan 2022 08:02 AM
Last Updated : 20 Jan 2022 08:02 AM

கிடப்பில் போடப்பட்ட பேராசிரியர்கள் குழுவின் பரிந்துரை; கடல் அரிப்பினால் மூழ்கும் தனுஷ்கோடி பாதுகாக்கப்படுமா? - மீனவர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. (அடுத்த படம்) கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய அரிச்சல்முனை கடற்கரை.

ராமேசுவரம்: பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு பரிந்துரைத்தபடி தனுஷ்கோடி கடல் அரிப்பைத் தடுக்க அதிகமான பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

தமிழகத்தில் தெற்கே மன்னார்வளைகுடா, வடக்கே பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் சில ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் மாசு மற்றும்பருவநிலை மாற்றங்களால் நீர்மட்டம் உயர்ந்தும், கடல் அலையின் சீற்றம் அதிகரித்தும் காணப்படுகிறது.

இந்த இரு கடல் பகுதியில் புனிதத் தலமான ராமேசுவரமும், சுற்றுலாத் தலமான தனுஷ்கோடி கடற்கரையும் அமைந்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய மிக முக்கியமான மீன்பிடித் துறைமுகம் ராமேசுவரத்தில் அமைந்துஉள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ராமேசுவரம், தனுஷ்கோடி மீனவர்கள் பல காலமாக கடல் அரிப்பினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவக் காற்றின்போதும், பருவ நிலை மாற்றங்களின்போதும் ராமேசுவரம் கடல் பகுதிகளில் அலையின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டங்களில் ராமேசுவரம், தனுஷ்கோடி மீனவக் கிராமங்களில் ராட்சத அலைகள் மேலெழுந்து கரை மீது மோதி எழும்பும். இதனால் இப்பகுதிகளில் உள்ள மீனவக் குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்து விடுவதோடு கடல் அரிப்பும் அதிகமாகிவிடும்.

கடல் அரிப்பால் ராமேசுவரம் தீவின் கடலோரத்தில் இருக்கும்குடிசைகள் முற்றிலும் பாதிப்புஅடைவதுடன் மீனவர்களின் இருப்பிடங்களும் அழிந்துவிடுகின்றன. மேலும் கடலோரத்தில் இருக்கும் சாலைகள், மின் கம்பங்கள், கட்டிடங்கள் ஆகியவை அழிந்து கடலுக்குள் மூழ்கிவிடுகின்றன.

தனுஷ்கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையும் கடல் அலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடல் அரிப்பால் பாதிப்படைந்திருந்த தனுஷ்கோடி அரிச்சல்முனை மெரைன் போலீஸ் சோதனைச் சாவடி 2020-ம் ஆண்டு புரெவி புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சரிந்து விழுந்துவிட்டது.

பேராசிரியர்கள் குழு பரிந்துரை

2017-ம் ஆண்டில் புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர்களை கொண்ட குழுவினர் ராமேசுவரம், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்தனர்.

கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க இயற்கையாக வளரும் பனைமரங்களை நடுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு அக்குழுவினர் பரிந்துரை செய்தனர். இப்பரிந்துரையைத் தொடர்ந்து தாமதப்படுத்தாமல் விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x