

மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்துக் கிடையே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம் மாசி வீதி களில் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.10-ல் கொடியேற்றத்துடன் தொடங் கியது. நேற்று முன்தினம் இரவில் திருக்கல்யாண கோலத்தில் பூப்பல்லக்கில் சிறப்பு அலங் காரத்தில் வீதி உலா வந்த மீனாட்சி அம்மனையும், யானை வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரரையும் மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
நேற்று அதிகாலை 5 மணி யளவில் கோயிலிலிருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட மீனாட்சி, சுந்தரேசுவரர் ஊர்வலமாக கீழமாசி வீதிக்கு வந்தனர். அங்கு அலங்கரிக் கப்பட்ட பெரிய தேரில் சுந்தரேசுவர ரும், சின்னத் தேரில் மீனாட்சியும் எழுந்தருளினர். காலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது.
மாசி வீதிகளின் இருபக்கமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந் தனர். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு மாசி வீதிகள் வழியாக மீண் டும் பகல் 11.45 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத் தில் பங்கேற்க வெளி மாவட்டங்களி லிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். பக்தர் களின் பக்தி பரவசத்துக்கிடையே, ‘ஹரஹர சங்கரர், மீனாட்சி சுந்தரர்’ என கோஷங்களை எழுப்பியபடி பக்தர்கள் தேரை இழுத்தனர்.
நேற்றிரவில் சப்தாவர்ண சப்பரத்தில் அம்மன்- சுவாமி எழுந்தருளினர். இன்று மாசி வீதிகளில் உலாவுடன் மீனாட்சி கோயில் சித்திரை விழா நிறைவடைகிறது.