

கோவை: கோவை மாவட்டத்தில் 5 நகராட்சி, 17 பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளன. இதுதொடர்பாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 55 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில், 1,216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு 7,01,641 ஆண்கள், 7,05,928 பெண்கள், 169 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 16 ஆயிரத்து 738 பேர் வாக்களிக்க உள்ளனர்.
மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, காரமடை, மதுக்கரை, கூடலூர், வால்பாறை ஆகிய 7 நகராட்சிகளில் 205 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 7 நகராட்சிகளில் மொத்தம் 92,056 ஆண்கள், 96,116 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர்.
33 பேரூராட்சிகளில் 590 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பேரூராட்சிகளில் 2,69,604 ஆண்கள், 2,81,0376 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 59 பேர் என மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 699 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இடஒதுக்கீடு விவரம்
கோவை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 7 நகராட்சிகளில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, மதுக்கரை, காரமடை ஆகிய 5 நகராட்சிகளின் தலைவர் பதவிகள் பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனைமலை, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, ஒடையகுளம், ஒத்தக்கால் மண்டபம், சிறுமுகை, சூலூர், திருமலையாம்பாளையம், போளுவாம்பட்டி, தென்கரை, சூளேஸ்வரன்பட்டி, பெரியநெகமம், வீரபாண்டி, எட்டிமடை, கண்ணம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய 16 பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வேடப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண்கள் (தனி) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.