வாகன காப்பீடு கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்க: மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்
ஏப்ரல் 1 முதல் வாகன காப்பீடு கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த கட்டண உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் வாகன காப்பீட்டுத் தொகையை காப்பீடு நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள அனுமதியளித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 40 சதவீதம்வரை வாகனங்களுக்கான காப்பீடு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் வாகன வாடகை மற்றும் சரக்குக் கட்டணம் உயரும். இதனால் சாதாரண நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, வாகனங்களுக்கான காப்பீட்டுத்தொகையை காப்பீடு நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ளலாம் என இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வாகனங்கள் பழுது ஏற்பட்டால் அல்லது தொலைந்துபோனால் அதற்குறிய காப்பீட்டுத் தொகை உரியகாலத்தில் முழுவதும் வாகன உரிமையாளருக்கு கிடைப்பதில்லை. வாகனங்கள் பாதிக்கப்படும்போது காலதாமதமின்றி காப்பீட்டுத் தொகையை வாகன உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.
