Published : 20 Jan 2022 07:19 AM
Last Updated : 20 Jan 2022 07:19 AM

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

பருத்தி மற்றும் நூல் விலை ஏற்ற இறக்கம் மற்றும் துணிகள், ஆடைகளின் விலையில் பாதகமான தாக்கம் ஆகியவை குறித்து தமிழக ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். நான் ஏற்கெனவே நவம்பர் மாதம் எழுதிய கடிதத்தில், ஊக வணிகத்தை தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீதம் இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்குபெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்த பட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள், நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும். அதிகபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5 சதவீதம் வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால், பருத்தி மற்மறும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கருது கின்றனர்.

எனவே, நூல் விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை (21-ம் தேதி) மாநிலம் முழுவதும் விசைத்தறி, ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தற்போது நிலவும் நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜன.17 மற்றும் 18-ம் தேதி ஆகிய 2 நாட்கள் உற்பத்தியை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நிறுத்தி விட்டனர்.

இந்த நிலைமையை கட்டுப் படுத்தாவிட்டால், ஏராளமான விசைத்தறிகள், ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தித் தொழிலகங்கள் இயங்குவது விரைவில் சாத்தியமற்றதாகிவிடும். இதன் விளைவாக மாநிலத்தில் பெரிய அளவிலான வேலையின்மை மற்றும் தொழில் துறை அமைதியின்மை ஏற்படும். இந்த ஆபத்தான நிலைமையை சீரமைக்க இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x