

சென்னை: சட்டக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்கள் இருவரும் பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்ட பூக்கடை எஸ்ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வியாசர்பாடி புதுநகர், 8-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். சட்டக்கல்லூரி மாணவரான இவரை கடந்த 14-ம் தேதி நள்ளிரவு முகக்கவசம் சரியாக அணியவில்லை என்று அபராதம் விதித்துடன் அவர் ஓட்டி வந்த சைக்கிளையும் கொடுங்கையூர் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த விகாரத்தில் மாணவருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக தெரிகிறது. இதன்பேரில் அப்துல் ரகீமை கைது செய்த போலீஸார் அவரை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பான காட்சிகள் பதிவாகாமல் இருக்க காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் திருப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த மாணவரின் பெற்றோர், நண்பர் தரப்பினர் காவல் நிலையம் சென்று நியாயம் கேட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உரிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், முதல்கட்டமாக மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் உத்திரகுமரன் ஆகியோர் காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.
உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
இதேபோல் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டில் சென்னை பூக்கடை காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியிலிருந்தவர் சேகர். இவர் பேஸ்புக்கில் அவ்வப்போது கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில்,
அண்மையில் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்த சேகர், ‘தமிழ் என்ற காட்டு மிராண்டி மொழில ஒருத்தன் ரூ.5 ஆயிரம் கொடுக்கச் சொன்னான். வந்தா, அதை காணோம். அதை கேளுங்கடா என்றால் பதில் ஏதும் இல்லை. மாறாக வேறு பதில் அளிக்கின்றனர்'என பதிவு தொடர்ந்துள்ளது.
தமிழக காவல்துறைக்கு பல சலுகைகள் செய்த அரசு, காவலர்களுக்கு பல நன்மை செய்த அரசை காவல்துறை சார்ந்த நபரே இப்படி பதிவு செய்வது நியாயமா, என மற்றொரு நபர் பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தார். இப்படி அடுத்தடுத்து கருத்து பரிமாற்றம் நடந்துள்ளது. இதை அறிந்த காவல் ஆணையர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதில், காவல் உதவி ஆய்வாளர் சேகர், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சீருடை பணியாளர்களுக்கான நடத்தை விதிகளை மீறியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து எஸ்ஐ சேகரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.