Published : 03 Apr 2016 01:51 PM
Last Updated : 03 Apr 2016 01:51 PM

வெற்றிக் கணக்கை தொடங்குமா மதிமுக?- நாகர்கோவில், குளச்சலில் போட்டியிட ஆர்வம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தேர்தலிலாவது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என மதிமுகவினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில், குளச்சல் தொகுதி களில் போட்டியிட அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்ட போதும், இதுவரை மதிமுக வெற்றி பெற்றதில்லை. இருந்தும் மாவட்டம் முழுவதும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு வைகோவுக்கு என தனிப்பட்ட ஒரு கூட்டம் உண்டு.

பலமான ஆதரவு

திமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய போதே, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இணையாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் திரளான ஆதரவாளர்களை வைகோ கொண்டிருந்தார். நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தை கைப்பற்றும் அளவுக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் மதிமுகவில் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் வைகோ அதில் தலையிட்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தியது தான் இந்த ஆதரவுக்கு காரணம். குமரி மாவட்டத்துக்கு அதிக முறை வருகை தந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் வைகோ தான் என்கின்றனர் மதிமுகவினர். ஆனாலும் இதுவரை வாக்கு அரசியலாக அதை அவர் பயன்படுத்திக் கொள்ளாதது தான் ஆச்சரியம்.

இப்போதைய நிலவரப்படி குமரி மாவட்டத்தில் இரு பேரூராட்சி தலைவர் பதவியும், ஒரு ஒன்றிய துணைத் தலைவர் பதவியும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவியும், உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களும் மதிமுகவுக்கு உள்ளனர்.

விலகியவர்கள் அதிகம்

மதிமுகவை பொறுத்தவரை அக்கட்சிக்காக மேடைதோறும் முழங்கி வந்த உள்ளூர்க்காரர் நாஞ்சில் சம்பத், இப்போது அதிமுகவில் பேச்சாளராக உள்ளார். சில மாதங்களுக்கு முன் மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த தில்லைசெல்வம், திமுகவில் இணைந்தார். அதன் பின் புதிய மாவட்டச் செயலாளராக வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தேர்தலும் வந்து விட பம்பரமாய் சுற்றிச் சுழல்கின்றனர் குமரி மதிமுகவினர்.

கணக்கை தொடங்குமா?

இத்தேர்தலில் குமரி மாவட்டத்தில் வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு மதிமுகவின் களப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி அவர்களது எதிர்பார்ப்புக்கு வலு சேர்க்கிறது.

நாகர்கோவில் தொகுதியில் மாவட்டச் செயலாளர் வெற்றி வேலும், குளச்சல் தொகுதியில் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சம்பத் சந்திராவும் போட்டியிடலாம் என தெரிகிறது. பள்ளியாடி குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மதிமுகவில் சீட் கேட்டுள்ளனர்.

வைகோ செய்த பணிகள்

மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேலிடம் இதுகுறித்து கேட்டபோது, `பாகிஸ்தான் சிறையில் வாடிய 18 குமரி மீனவர்களை மீட்டபிறகுதான் குமரி மண்ணில் கால் பதிப்பேன் என சபதமிட்ட வைகோ, 18 பேரையும் மீட்டுக் கொண்டு வந்தார். காமராஜருக்கு கன்னியா குமரியில் மணிமண்டபம் கட்ட குரல் கொடுத்தது, ஆசாரி பள்ளத்தை சேர்ந்த தச்சுத் தொழிலாளி பால்ஜார்ஜ் நாடார் என்பவர் பொய் வழக்கில் சிக்கி தூக்கு கயிற்றில் நின்ற போது போராடி மீட்டுக் கொண்டு வந்தது, மெர்க்கண்டைல் வங்கி மீட்பு போராட்டம், கேரள அரசின் பாடத் திட்டத்தில் நாடார் இனத்தவரை கொச்சைப்படுத்திய போது அதற்கான நகல் எரிப்பு போராட்டம் நடத்தியது, நெய்யாறு இடதுகரை கால்வாயில் நீர் கேட்டு போராட்டம் நடத்தியது, பேச்சிப்பாறை அணையை தூர் வார பசுமை தீர்ப்பாயத்தில் வாதாடி உத்தரவு பெற்றது என, குமரி மக்களுக்காக வைகோ செய்த பணிகள் ஏராளம்.

அதைத் தான் மக்கள் மன்றத்தில் கொண்டு செல்கிறோம். ஆண்ட கட்சிகளின் ஆட்டத்தையும் மக்கள் மன்றத்தில் கொண்டு செல்கிறோம். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் இருப்பவர்கள் ஊழல் கரை படியாத நேர்மை யாளர்கள். கல்வியறிவு நிறைந்த குமரி மாவட்ட மக்கள் இதை உணர்ந்துள்ளனர்.

ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டத்தையும் முடித்து விட்டோம். பூத் கமிட்டியும் அமைக்கப்பட்டு விட்டது. நாகர்கோவில், குளச்சலில் வேன் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கூட்டணியாக 6 தொகுதிகளிலும் தீவிர பணி நடைபெற்று வருகிறது. இம்முறை குமரியின் செல்லப் பிள்ளை வைகோவுக்கு மக்கள் ஆதரவு நிச்சயம்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x