சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடக்கிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடக்கிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாகi சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்திருந்த மனு: சென்னை முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் பெய்த பருவமழையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளித்தது. இதனால் பொதுமக்கள் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்தனர்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அதன்பிறகும் அதிகாரிகளின் நடவடிக்கையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.

இதனால் கடந்த டிச.30 அன்று பெய்த கனமழையால் சென்னையில் மீண்டும் தண்ணீர் தேக்கமடைந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் மழைநீர் வடிகாலுக்கு முறையான நடைமுறையை மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றாததே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைய முக்கிய காரணம். எனவே சென்னையில் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் அனிதா ஆஜராகி, இதேபோன்ற மற்றொரு வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, மழைநீர் தேங்காத வண்ணம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த வழக்கு வரும் பிப். 3-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in