

தமிழகம் வரும் சோனியா, ராகுல் ஆகியோர் கருணாநிதி, ஸ்டாலினு டன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தமிழக காங் கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன் கூறினார்.
மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். வேலூர் கிழக்கு மாவட்ட தமாகா தலைவரும், முன் னாள் எம்எல்ஏவுமான முனிரத்தினம் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன் னிலையில் காங்கிரஸில் இணைந் தார். முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
கடந்த 15 மாதங்களுக்கு முன்பு நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. நமக்குள் எந்த பேதமும் இல்லை. சொந்த வீட்டில் கோபித்துக் கொண்டு செல்வது போல தமாகாவுக்கு சென் றவர்கள் மீண்டும் தாய் வீடான காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
ஜி.கே.மூப்பனாரின் மகனான வாசன் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. ஆனால், அவர் மதவாத பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு நடத்தினார் என கேள்விப்பட்டதும் துடிதுடித்துப் போனேன். காங்கிர ஸின் உயிர்நாடியான மதச்சார் பின்மை கொள்கைக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேருவதற்காக பேசியதை எந்த காங்கிரஸ் தொண் டனாலும் ஏற்க முடியாது. எனவே, வாசன் தவிர தமாகாவில் உள்ள மற்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும்.
முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ், பி.விஸ்வநாதன், கார்வேந்தன், ராணி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் காங்கி ரஸில் இணைய உள்ளனர். ஜெய லலிதாவின் அழைப்புக்காக காத்தி ருப்பதாக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணி யன் கூறியுள்ளார். அவர் காத்திருக் கட்டும். மற்றவர்கள் உடனடியாக காங்கிரஸில் இணையுமாறு அழைக் கிறேன். தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸில் புதிய அத்தி யாயம் தொடங்கும்.
மதுவிலக்கு, விவசாயக் கடன் ரத்து, ஆவின் பால் விலை குறைப்பு என்பது உட்பட மக்களைக் கவரும் பல அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த தேர்தல் அறிக்கை திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும்.
‘போஸ்டரை காப்பியடித்த பாமக’
பாமக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் போஸ்டரை காப்பி அடித்து ‘மாற்றம்.. முன்னேற் றம்’ என போஸ்டர் ஒட்டியவர்கள் இப்படி பேசுவதில் வியப்பில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக மது விலக்கை அமல்படுத்த சிறு நடவடிக்கைகூட எடுக்காத முதல்வர் ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வரவுள்ளனர். சோனியா, ராகுல், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வார்கள். அதற்கான தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.