

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே நிலாப் பெண்ணாகச் சிறுமியைத் தேர்வு செய்த கிராமப் பெண்கள் பவுர் ணமி இரவு வழிபாடு நடத்தினர்.
வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாத பவுர்ணமி இரவில் நிலாப் பெண் வழிபாடு நூறாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முன்னதாக கிராமப் பெரிய வர்கள் கூடி ஒவ்வொரு குடும் பத்திலும் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் நிலாப் பெண்ணைத் தேர்வு செய்தனர். அதன்படி இந்த ஆண்டு கோட்டூரைச் சேர்ந்த விசுவநாதன், விசாலாட்சி தம்பதியின் மகள் 6-ம் வகுப்பு மாணவி பிரகதீஷா(11) தேர்வு செய்யப்பட்டார். இவர் 3 ஆண்டுகளுக்கு நிலாப் பெண் ணாக இருப்பார்.
இச்சிறுமியை கிராம மக்கள் ஊர் எல்லையில் ஆவாரம் பூக்களைக் கொண்டு அலங்கரித்து புத்தாடை அணிவித்து தலையில் ஆவாரம் பூ நிரப்பிய கூடையுடன் ஊர்வலமாக ஊரில் உள்ள மாசடைச்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் இரவு முழுவதும் கிராமப் பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு நிலா பாடல் பாடி பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் சிறுமிக்கு விரும்பிய உணவு வகைகளை வழங்கினர்.
அதிகாலை நிலவு மறையும் முன் நிலாப் பெண்ணுடன் ஊர் எல்லையில் உள்ள நீர் நிலையில், ஆவாரம் பூக்களை மிதக்க விட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். அதன் பிறகு சூரிய உதயத்துக்கு முன் வீடு திரும்பினர்.
இந்த விழா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடந்தது.