

தென்காசி: தென்காசியில் ஆயிரக்கணக்கான மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று, மாவட்ட சிஐடியு செயலாளர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி நகரம் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக உள்ளது. தற்போது அதிகமான மக்களுக்கு திடீர் மர்மக் காய்ச்சல், தலைவலி, சளி, கை கால் வலி, அதிகமான சோர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் செயல்படவில்லை. லேப் டெக்னீ சியன் இல்லாத காரணத்தால் பரிசோதனைக்கு வரும் மக்களுக்கு சோதனை செய்யப்படவில்லை.
பல நேரங்களில் கரோனா பரிசோதனை மையம் ஆளில்லா மல் உள்ளது. தென்காசி மலையான் தெரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கரோனா பரிசோதனை எடுக்கப் படுவதில்லை. தடுப்பூசி மட்டும் போடப்படுகிறது. தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கரோனா பரிசோதனை எடுப்பதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் தென்காசி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டது. தற்போது எந்தவிதமான பரிசோதனையும் எடுக்கப்படவில்லை.
தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், தென்காசி சுற்று வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு அதிகமான லேப் டெக்னீசியன் மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் தென்காசி நகரம், சுற்று வட்டார பகுதிகளில் கரோனா பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கரோனா பரிசோதனை எடுப்பதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர்.