

பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது வேட்பாளர் செலவுக் கணக்கில்தான் சேரும். தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விளம்பரங்களில் அனுமதி எண் இடம் பெற வேண்டும் என பத்திரிகைகள், ஊடக நிறுவனங்களுக்கு தமிழக தேர்தல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிரச்சாரம் தொலைக் காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தியாகவும், விளம்பரமாகவும் வெளிவரும். இந்நிலை யில் விளம்பரங்கள், பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்தி கள் தொடர்பாக நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில், பத்திரிகைகள், ஊடகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ராஜேஷ் லக்கானி மற்றும் இணை தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம், விதிகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பாக விளக்கினர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரைப் பற்றி வெளியாகும் செய்திகள், மக் களிடையே தாக்கத்தை ஏற்படுத் தும். எனவே, தமிழகத்தில் மே 15-ம் தேதி காலை முதல் 16-ம் தேதி மாலை வரை, முன் அனுமதி பெற்ற விளம்பரங்கள் தவிர வேறு விளம் பரங்களை வெளியிடக்கூடாது. இதற்கான முன் அனுமதியை மாநிலம் அல்லது மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்காணிப்பு குழுவிடம் பெற வேண்டும்.
‘பெய்டு நியூஸ்’
பணம் கொடுத்து வெளியிடப் படும் செய்திகள், ‘பெய்டு நியூஸ்’ எனப்படும். இந்த வகை செய்தி களால் ஏற்பட்ட சிக்கல்களை கருத் தில் கொண்டு புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியை பெரிய அளவில் ஊக்குவித்து செய்தி வெளியிடுதல், அதையே தொடர்ந்து செய்தல் போன்றவை பணம் கொடுத்து செய்தி வெளியிடுதல் அடிப்படை யில் வருகிறது.
அதேபோல் ஒரே புகைப்படம் அல்லது செய்தி, ஒரே அளவில், ஒரே எழுத்துருவில் வெளியிடப் பட்டிருந்தால் அவை ‘பெய்டு நியூஸ்’ ஆக கருதப்படுகிறது. இவை வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
தொலைக்காட்சிகளில், தொடர்ந்து வேட்பாளர் தொடர்பான தகவல்கள் காட்டப்பட்டால் அதுவும் ‘பெய்டு நியூஸ்’ கீழ் வரும். எனவே, டிவி நிறுவனங்கள் இதில் கவனமாக செயல்பட வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல்கள் வேட்பாளர் களின் செலவு கணக்கை குறைப் பதற்கே என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘வேட்பாளர்கள் செலவு ரூ.28 லட் சத்தை தாண்டக் கூடாது என்பது தான் இதன் நோக்கம். தொலைக் காட்சி நிறுவனங்கள் விளம்பரம் கொடுக்க வருபவர்களிடம் விளம் பரத்தின் அனுமதி எண்ணை கட்டாயம் கேட்டு பெற வேண்டும். வேறு யாராவது விளம்பரம் கொடுத்தால், வேட்பாளர் அல்லது கட்சியின் அங்கீகார கடிதம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
6.55 லட்சம் பேர்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மேலும் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இன்று (நேற்று) இரவு 12 மணியுடன் முடிகிறது. இன்று பிற்பகல் வரை, 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 1.79 லட்சம் பேர் பெயர் நீக்கத்துக் காகவும், அதே அளவு பெயர் சேர்க் கவும், மீதமுள்ளவர்கள் திருத்தம், புகைப்பட மாற்றம் உள்ளிட்டவற் றுக்கும் விண்ணப்பித்து உள்ளனர். இன்னும் இரு தினங்கள் வரை, வாக்காளர் பட்டியலில் வேட்பாளர்கள் பெயர் இல்லாத இடங்களில் சேர்ப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி இறுதியாக மொத்த வாக்காளர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.