Published : 19 Jan 2022 06:26 PM
Last Updated : 19 Jan 2022 06:26 PM

தாமதமாகும் புத்தகக் காட்சி... கைகொடுத்த மெய்நிகர் - ஆன்லைனில் களைகட்டும் விற்பனை!

தனிமனிதன் தொடங்கி ஒரு சமூகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு. இதனால்தான் என்னவோ, ரஷ்யப் புரட்சியாளர் லெனின் "துப்பாக்கிகளை விட வலிமையான ஆயுதங்கள் புத்தகங்கள்'' எனக் கூறியுள்ளார். டச் ஸ்கிரீன் செல்போன்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்கூட புத்தகங்கள் தனக்கான இடத்தைத் தக்கவைத்தே வருகின்றன. என்னதான் இன்றைய இளம் தலைமுறை செல்போன் சாட்களிலும், சமூக வலைதளங்களிலும் மூழ்கிக் கிடந்தாலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிண்டில் உள்ளிட்டவை மூலம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் தொடரவே செய்கின்றன.

ஒவ்வோராண்டும் ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறும். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சிக்கு வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்தக் கண்காட்சியில் சுமார் 8 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்று, சுமார் 10 கோடி ரூபாய்க்கு அதிகமான புத்தகங்கள் விற்பனையாயின.

இந்த ஆண்டும் நந்தனத்தில் 900 அரங்குகளுடன் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை 45-வது புத்தகக் காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் காரணமாகப் புத்தகக் காட்சி ஒத்திவைக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பு பதிப்பக உரிமையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் பிரபலமான பல பதிப்பகங்கள், புத்தகக் காட்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தங்களது புத்தகங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அது தொடர்பாக விளம்பரங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், அனைத்துப் பதிப்பகங்களையும் இணைத்து ஆன்லைன் மூலம் புத்தகக் காட்சியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வாசகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான், வாசகர்களின் புத்தகத் தேடலை அறிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது "மெய்நிகர் புத்தகக் காட்சி". பெருந்தொற்றுக் காலம் முடிந்து இயல்புநிலை திரும்பும் வரை வாசகர்கள் தங்களுக்குத் தேவையான, பிடித்த புத்தகங்களை இந்த மெய்நிகர் புத்தகக் காட்சியில் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேக இணையதளப் பக்கம் www.vbf.co.in உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் புத்தகக் காட்சியில், கண்ணதாசன் பதிப்பகம், சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம், வானவில் புத்தகாலயம், தி ரைட் பப்ளிஷிங், விகடன் உள்ளிட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மணிவாசகம் மற்றும் கவிதா பதிப்பகங்களின் புத்தகங்கள், வானதி, வர்த்தமான், வம்சி, திருமகள், பாரதி புத்தகாலயம் மற்றும் இந்து தமிழ் திசை உள்ளிட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இணையதளத்தில் வாசகர்கள் உள்நுழைந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை எளிதாக வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இணையவழி பணப் பரிமாற்றத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு 15 சதவீதம் முதல் கழிவு விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மெய்நிகர் புத்தகக் காட்சியின் அமைப்பாளர் கார்த்திகேயனிடம் பேசும்போது, "இணையவழி வர்த்தகத்தில் கோலோச்சும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட புத்தக விற்பனையைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், கேரளாவில் ஆங்கிலம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புத்தகங்களைப் பதிப்பிக்கும் DC புக்ஸ் என்ற நிறுவனம் கரோனா காலகட்டத்தில், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் போல புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்த்துள்ளது. இது மாநில அரசின் உதவியுடன் அங்கு நடந்துள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த மெய்நிகர் புத்தகக் காட்சி. நேரடி புத்தகக் கண்காட்சியில் அரங்குகள் ஒதுக்கப்படுவதுபோல, சர்வரில் பதிப்பகங்களுக்கான ஸ்பேஸ் ஒதுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் முதல், 50 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வரை உள்ளது. இது ஒரு ஆண்டுக்கான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிப்பகங்களைத் தவிர்த்து, மேலும் 15 பதிப்பகங்கள் மெய்நிகர் புத்தகக் காட்சி குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். 25 பதிப்பகங்கள் கண்காட்சியில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளனர்” என்றார்.

இந்து தமிழ் திசை பப்ளிகேஷன் மேலாளர் எஸ்.இன்பராஜிடம் கேட்டபோது, "கரோனா பரவல் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புத்தகக் காட்சி நடைபெற்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்து தமிழ் திசை சார்பில் 5 புதிய புத்தகங்கள் வரவேண்டியுள்ளது. தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ள இயர்புக் 2022-க்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சல் வழியில் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும், நேரடி புத்தகக் காட்சி நடைபெறாததால், புத்தகப் பதிப்பாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் மெய்நிகர் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இதில், வாசகர்களுக்கு 15 சதவீதம் கழிவு வழங்கப்படுகிறது. முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதால் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

புத்தகக் காட்சி தள்ளிவைக்கப்பட்டபோதே பல்வேறு பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பலர் ஆன்லைன் மூலம் புத்தக விற்பனையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பனுவல் புத்தக விற்பனை நிலையத்தின் மேலாளர் ராம்குமார் கூறும்போது, "புத்தகத்தை நேரடியாகக் கையில் எடுத்து வந்து கொடுத்து வாங்கிச் செல்லும் அனுபவத்தை வாசகர்கள் இழந்திருந்தாலும், ஆன்லைனிலும் புத்தகங்களின் விற்பனை சிறப்பாகவே உள்ளது. வாசகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடி வாங்குகின்றனர். புத்தகக் காட்சி தள்ளிப்போனதால், பல புதிய புத்தகங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருதுபெற்ற அம்பையின் சிவப்புக் கழுத்துடன் 'ஒரு பச்சைப் பறவை', அதேபோல் பால புரஸ்கார் விருது பெற்ற மு.முருகேஷின் 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' ஆகிய நூல்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன.

உலகம் முழுவதும் உள்ள பெருந்தொற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு, மெய்நிகர் புத்தகக் காட்சி போன்ற நடவடிக்கைகளைப் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்களின் நலன் கருதி அரசு எடுக்க வேண்டும். அதேநேரம் கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களில் அரசு பல புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் வாசிப்பு பழக்கம் பரவலாக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x