Published : 19 Jan 2022 05:52 PM
Last Updated : 19 Jan 2022 05:52 PM

அறுவடைக் காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் இருப்பதா?- மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை: 'அறுவடைக் காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் இருப்பதா?' எனத் தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் கொள்ளைகளால் உழவர் பெருமக்கள் அடையும் இன்னல்கள் ஒருபக்கம் இருக்க, அறுவடைக் காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் இருப்பது அரசால் கிடைக்கும் கொஞ்சநஞ்சப் பயனும் உழவர்களுக்குக் கிடைக்க வழியற்றுப் போகிறது.

திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மேட்டூர் அணையின் நீரை நம்பி பாசனம் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக, பல லட்சம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தொடர் மழையால் விவசாயிகளுக்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி எஞ்சிய விளைச்சலை அறுவடைக் காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில், நிலையங்களுக்கு வெளியே வேதனையோடு கொட்டி வைத்துள்ளனர். நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை; தானியங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

முப்போகம் ஒரு போகமாவிட்டது. ஒருபோக சாகுபடிக்கே விவசாயிகள் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சம்பா அறுவடை தொடங்கும் டிசம்பர் மாதத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இதுவரை திறக்காமல் இருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். அதிக வட்டிக்குக் கடன் வாங்கி விளைவித்த பயிரை அறுவடை செய்தும் விற்பனை செய்ய முடியாமல் இருப்பது விவசாயிகளுக்குப் பேரிழப்பாகும். இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளைத் தனியார் விற்பனையாளர்களிடம் மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். விவசாயிகளின் இன்னல்களை அரசு உணர வேண்டும். மேலும், ஈரப்பதத்தைக் கணக்கிடாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.

இது ஒருபுறம் என்றால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வரும் உழவர்கள், தங்களின் நிலங்களுக்குரிய அசல் சிட்டா அடங்கலை கிராம நிர்வாக அதிகாரிகளிடமிருந்து வாங்கி வரவேண்டும் என்பன போன்ற நடைமுறைகள் சாத்தியமற்ற, ஏற்றுக்கொள்ளவே முடியாதவையாக உள்ளன. (விவசாயிகளின் கோரிக்கைக்குப் பிறகு ஆன்லைன் முன்பதிவு எனும் நடைமுறை தேவை இல்லை என இன்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளது வரவேற்புக்குரியது)

விவசாயிகள் தொடர்ந்து சந்தித்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவாய்த் துறையில் உள்ள விவசாயிகளின் நிலம் தொடர்பான தரவுகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டால், விவசாயிகள் அசல் சிட்டா பெறக் காத்துக் கிடப்பதும், அதற்காக ஒவ்வொரு முறையும் கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையும் தடுக்கப்படும். மேலும், நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகளுக்கு, அவர்களின் பெயர், முகவரி, எத்தனை நெல் மூட்டைகள் மற்றும் டோக்கன் எண் ஆகியவை குறித்த தகவல்கள் அடங்கிய டோக்கன்களை பிரிண்ட் செய்து கொடுக்கும் நடைமுறையையும் பின்பற்ற வேண்டும். இதனால் விவசாயிகள் தனியே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. மேலும், 40 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால்தான் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியும் என்ற ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.

எனவே, முந்தைய ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தது போலவே, அனைத்து மாவட்டங்களிலும் எல்லா நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்கவும், தேவைப்பட்டால் கூடுதலாகப் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்குச் சுமையாக விளங்கும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு நீக்க வேண்டும்'' என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x