Last Updated : 19 Jan, 2022 03:08 PM

 

Published : 19 Jan 2022 03:08 PM
Last Updated : 19 Jan 2022 03:08 PM

புதுச்சேரியில் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தேர்வு தொடக்கம்: 500 பேர் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் காவலர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த முதல் 500 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி காவல்துறையில் உள்ள காவலர்-390, ரேடியோ டெக்னீஷியன் 12, மற்றும் டெக் ஹேண்ட்லர்-29 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி மொத்தமாக 17,227 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் காவலர் 13,970, ரேடியோ டெக்னீஷியன் 229, டெக் ஹேண்ட்லர் 588 என 14,787 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2,440 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்தத் தேர்வில் பங்கு கொள்பவர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காவல் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கோரிமேடு காவலர் மைதானத்தில் இன்று (ஜன.19) தொடங்கியது. முதல் நாளான இன்று 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 6, 8, 10 ஆகிய நேரங்களில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

முன்னதாக உடல் தகுதித் தேர்வில் பங்கு பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர்களது உயரம், மார்பளவு கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் தேர்வானவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

ஓட்டத்தைத் துல்லியமாகக் கணக்கீடு செய்வதற்கு டிஜிட்டல் முறையில் ஜிப் பயன்படுத்தப்பட்டது. கரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டுமே உடல் தகுதித் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். உடல் தகுதித் தேர்வு முழுவதும் 22 சிசிடிவி கேமராக்கள், 3 வீடியோ கேமராக்கள் மற்றும் ஸ்டில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. ஏடிஜிபி ஆனந்த மோகன், டிஐஜி மிலிந்த் மகாதியோ தும்ரே தலைமையிலான போலீஸார், தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவலர் உடல் தகுதித் தேர்வு நடைபெறும் கோரிமேடு காவலர் மைதானத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது:

"நீண்டகாலமாக காவலர் தேர்வு நடைபெறாமல் இருந்த சூழ்நிலையில், நமது அரசு காவலர் தேர்வை நடத்தி காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் உடல் தகுதித் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்வு பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. உடல் தகுதித் தேர்வு 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் என 4 பிரிவகளாக, அனைத்தும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகின்றன.

காவலர் தேர்வு எந்தவிதக் குறுக்கீடும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதற்காக காவல்துறை அதிகாரிகள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். யாருடைய தலையீடும் இல்லாமல், நேர்மையான முறையில் காவலர் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வானவர்களுக்கு எழுத்துத் தேர்வு பிறகு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறுவோருக்கு உரிய ஆணையை அரசு வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றது. இதன் மூலம் 390 காவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையில் 400 காவலர்கள், 400 ஊர்க்காவல் படையினர், 200 கடலோரக் காவல் படையினர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இவை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக நிரப்புவதற்கான நடவடிக்கையைக் காவல்துறை எடுத்து வருகிறது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கின்ற இளைஞர்கள் காவலர்களாகப் பணி செய்வதற்கான வாய்ப்பை எங்கள் அரசு எடுத்து வருகிறது. உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டு கரோனா ‘பாசிட்டிவ்’ உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி மாதம் உடல் தகுதித் தேர்வு முடியும்போது வாய்ப்பு கொடுத்து தேர்வு நடத்தப்படும்.”

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x