

சென்னை : டெல்லியில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் தியாகிகளின் அலங்கார ஊர்தி தமிழகத்தின் அணிவகுப்பில் இடம் பெறும் முதல்வர்
அறிவிப்புக்கு மனித நேய ஜனாநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வரவேற்றுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக தியாகிகளின் வரலாறு பொறித்த வாகனங்கள் சில புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவை தமிழக அரசின் ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை மனித நேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. பாராபட்சத்தையே கொள்கையாக கொண்டிருக்கும் மத்திய அரசின் இந்த போக்கு, தமிழக தியாகிகளை அவமதிக்கும் செயல் என்பதில் ஐயமில்லை. கோட்சேக்களையும், கோல்வால்க்கர்களையும் கொண்டாடுபவர்களுக்கு உண்மையான தியாகிகள் மீது வெறுப்பு ஏற்படுவதில் ஆச்சர்யம் இல்லை.
இந்த நிலையில் தமிழக அரசு எந்தெந்த மாநிலங்களின் தியாகிகள் இது போல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களோ , அவர்களை எல்லாம் தமிழக அரசின் வாகன அணிவகுப்பில் பங்கு பெற செய்வது குறித்து யோசிக்கலாம். இது தமிழக அரசின் மீதும், தமிழக மக்களின் மீதும் இது போல் பாதிக்கப்பட்ட பிற மாநில மக்கள் பிரியம் கொள்ள வழிவகுக்கும் . மேலும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும் உதவும். அவர்களும் அவரவர் மண்ணில் நமது தியாகிகளை கொண்டாடும் எண்ணங்களையும் உருவாக்கும். எனவே இது குறித்தும் தமிழக அரசு கவனம் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசின் வாகன அணிவகுப்பில் அன்னை வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருது சகோதரர்கள், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம் சுந்தரலிங்கம், வ.உ.சிதம்பரனார், தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன் படையாச்சி, திருப்பூர் குமரன் உள்ளிட்டவர்களுடன், 1806 ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சியும் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
1857ம் ஆண்டு நாடு தழுவிய அளவில் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னோட்டமாக, தீரன் திப்பு சுல்தானின் மகன்களால் முன்னெடுக்கப்பட்ட வேலூர் புரட்சி தமிழகத்தின் ரத்தம் தோய்ந்த கம்பீர வரலாறாகும். எனவே தமிழக அரசும், முதல்வரும் புறக்கணிக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரையும் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும், தமிழக மக்கள் அனைவரும் ஒரணியில் நின்று இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசு இனியாவது பாராபட்சத்தை கைவிட்டு, அனைத்து மாநில சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் சம அளவில் கொண்டாட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்."
இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.