

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றும், அதனைக் கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பொங்கல் விழா காரணமாக தொடர்ச்சியாக ஐந்தாறு நாட்கள் விடுமுறை. இந்த விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மட்டுமே 8 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் கிராமங்களிலும் தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறியிருந்தோம். அது கடந்த இரண்டு நாட்களில் நிரூபணமாகியுள்ளது. அடுத்துவரும் இரண்டு, மூன்று நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏறக்குறைய 1 லட்சத்து 92 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது, இதில் 9 ஆயிரம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது, 1 லட்சத்து 83 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன.
கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மத்திய அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சந்தித்த பின்னர், நீட் தேர்வு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.