Published : 19 Jan 2022 12:54 PM
Last Updated : 19 Jan 2022 12:54 PM

மதுரையில் நவீன ஐடி பூங்கா முதல் மெட்ரோ வரை: முதல்வரிடம் சு.வெங்கடேசன் எம்.பி. 23 கோரிக்கைகள்

கோப்புப் படம்

சென்னை : மதுரை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்தார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகள்: மதுரை மாவட்டத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும்; மேலூர் பகுதி தொழிற்பேட்டைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மதுரைக்கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற்சாலைகளுக்கு 10 சதவிகித இடங்களை வகைப்படுத்த வேண்டும்; மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்த தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்; மதுரையில் புதிய நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப பூங்காவினை உருவாக்க வேண்டும்.

மதுரையில் ஜவுளி தொழிலை மேம்படுத்த ஜவுளிக்கென தனியாக வாரச் சந்தையினை உருவாக்க வேண்டும்; சுங்கடிச் சேலைகளுக்கான சிறப்பு சந்தையினை ஏற்படுத்த வேண்டும்; உயிரியல் துறையில் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க காமராசர் பல்கலைக்கழகத்தில் டைசல் பூங்காவினை உருவாக்க வேண்டும்; மதுரையின் மையத்தின் இருக்கும் மத்திய சிறைச்சாலையினை உடனடியாக புறநகர் பகுதிக்கு மாற்றிட வேண்டும்; சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை தற்போது மதுரை
மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும். அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.

பாத்திமா கல்லூரி முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலை சந்திப்பு வரை வைகையின் வடக்கு நதிக்கரை சாலையை விரிவுபடுத்த வேண்டும்; காளவாசலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மேலக்கால் சாலையை விரிவுபடுத்த வேண்டும்; விரகனூர் சந்திப்பு , மண்டேலாநகர் சந்திப்பு, மேலமடை, அரசு ராஜாஜி மருத்துவமனை, மாட்டுத்தாவணி , தெற்குவாசல், கோரிப்பாளையம்
ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண்டும்; பழுதான நிலையில் உள்ள மேயர் முத்து பாலத்தை சீரமைக்க வேண்டும்; பழங்காநத்தம் வஉசி பாலத்தினை விரிவுபடுத்தி புதுப்பிக்க வேண்டும்.

மதுரை மாவட்ட விரைவு போக்குவரத்து ஏற்பாட்டிற்கு மதுரை மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு விரைந்து செய்யப்பட வேண்டும்; வைகை நதியினை பாதுகாக்க ஐந்து மாவட்ட நிர்வாக தலையீடுகளை மாற்றி ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டு வருகிற புதிய வைகை நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்; மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும்; வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பது கழிவுநீர் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

மதுரை மாநகரின் சாலைகளை சீரமைக்க உடனடியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும்; அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அதிநவீன கலை அரங்கம் உருவாக்கப்பட வேண்டும்; உலகத் தமிழ் சங்கத்தினை சீரமைத்து அனைத்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை உருவாக்க வேண்டும்; கொட்டாம்பட்டியில் புதிய அரசு ஐடிஐ உருவாக்க வேண்டும்; மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியினை அரசுக் கல்லூரியாக மாற்றிட வேண்டும்; மதுரை விமான நிலைய விரிவாக்க சுரங்கப்பாதை, மதுரை நகரத்தின் புதிய உள்வட்டச்சாலை , வெளிவட்டச்சாலை உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை இயக்கிடவும், அதற்கான பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கிடவும் வேண்டும்; விவசாயிகளின் நலனுக்காக சாத்தையாறு அணையில் பெரியார் பிரதான கால்வாய் மூலம் நீரை தேக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை துவக்க வேண்டும்; மேலூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடம் கட்ட 50 கோடி ரூபாய் ஒதுக்கிட வேண்டும்; மதுரையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து , ஏற்கெனவே உள்ள காடுகளை பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்; மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் அதன் முழுக் கொள்ளளவிற்கு தூர்வாரிட வேண்டும்.

வைகையின் பிறப்பிடமான மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையின் சுற்றுச்சூழலை மீட்டுருவாக்கம் செய்து காற்று மாசுபடுதலை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்; மதுரை எய்ம்ஸ், மதுரை நைபர், மதுரை சர்வதேச விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை
உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x