Published : 19 Jan 2022 12:00 PM
Last Updated : 19 Jan 2022 12:00 PM

தலிபான்களால் கொல்லப்பட்ட தந்தை: துவண்டுவிடாமல் சாதித்த நாடியா

11 வயதில் தலிபான்களிடமிருந்து தப்பித்த நாடியா நதிம் என்ற சிறுமி, கால்பந்தாட்ட வீராங்கனை, மருத்துவர் எனத் தனது கனவுகளை நனவாக்கிக் கொண்டார்.

2,000ஆம் ஆண்டு தலிபான்களால் நாடியாவின் தந்தை கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாடியாவின் குடும்பம் பாகிஸ்தான் வழியாக டென்மார்க் சென்றது. அங்கிருந்து நாடியாவின் கால்பந்து பயணமும் ஆரம்பித்தது.

கால்பந்து பயிற்சியைத் தீவிரமாக மேற்கொண்ட நாடியா தனது தீவிர முயற்சியால் டென்மார்க் மகளிர் அணியில் இடம்பெற்றார். டென்மார்க் நாட்டிற்காக இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 200 கோல்களை நாடியா அடித்துள்ளார். மான்செஸ்டர் அணிக்காகவும் நாடியா விளையாடியுள்ளார்.

கால்பந்து மட்டும் நாடியாவின் கனவல்ல. சுமார் 11 மொழிகளைக் கற்றுக்கொண்ட நாடியா, மருத்துவப் படிப்பை முடித்து தற்போது மருத்துவராகப் பட்டம் பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த சிறந்த விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் நாடியா 20ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். உலகின் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் நாடியாவும் ஒருவர். இந்த நிலையில் மக்கள் சேவை செய்யும் பொருட்டே தற்போது மருத்துவராகி இருப்பதாக நாடியா தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பட்டம் பெற்றது குறித்து நாடியா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவுக்கு எப்போது கடமைப்பட்டிருப்பேன். என்னை வெறுப்பவர்களுக்கு... நான் மீண்டும் சாதித்துக் காட்டிவிட்டேன். நீங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

ஆப்கானில், தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு ஏராளமான பெண்கள் தங்கள் கனவுகளைப் புதைத்து மீண்டும் வீட்டினுள் அடைபட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் நாடியாவின் இந்தப் பயணம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x