Published : 19 Jan 2022 10:44 AM
Last Updated : 19 Jan 2022 10:44 AM

கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூடுக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை : கரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழகத்தில் திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.
இதை, அனைத்திந்திய அதிமுக சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம், கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டது.

ஆனால், இந்த சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ராக்கெட் வேகத்தில் கரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நோய்த் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக இந்த அரசே செய்திக் குறிப்பினையும் வெளியிடுகிறது. ஆனால், உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களும், மருத்துவர்களும் தகவல் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் அரசு எடுத்த இடையராத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் அறிவித்த 2021, பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கரோனா நோய்த் தொற்றால் சுமார் 500 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2020ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில், தமிழகத்தில் நாளொன்றுக்கு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 775. அந்த காலக்கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய முதல்வராக இருக்கும் ஸ்டாலின், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால்தான் கரோனா தொற்று பரவுகிறது என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

மேலும், ஸ்டாலின் உட்பட அவரது கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனால், இன்றைக்கு இந்த திமுக அரசின் வாக்குமூலப்படி, தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதற்கு முன்னாள், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவிய கரோனா நோய்த் தொற்று, தற்போது காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து 9 நபர்களுக்கு பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள திமுக அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று திமுக செயல்படுகிறது. ஆகவே, இந்த திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x