Last Updated : 19 Jan, 2022 06:20 AM

 

Published : 19 Jan 2022 06:20 AM
Last Updated : 19 Jan 2022 06:20 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார் பரிசு பெற்ற புதுக்கோட்டை ‘புல்லட்’ காளைக்கு குவியும் பாராட்டு: பட்டு வேட்டி அணிவித்தார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார் பரிசு பெற்ற ‘புல்லட்’ காளைக்கு வேட்டி அணிவித்து, உரிமையாளர் தமிழ்ச்செல்வனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார் பரிசு பெற்ற ‘புல்லட்’ காளைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்தவர் எம்.தமிழ்ச்செல்வன்(57). மதுரை மாவட்டம்அலங்காநல்லூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், இவருக்குச் சொந்தமான ‘புல்லட்’காளை, யாருக்கும் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடி, மாடுபிடி வீரர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியதுடன், ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால்,சிறந்த காளைக்கான முதல் பரிசான காரையும் பெற்றது.

இந்தக் காளையின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நேற்று நேரில் சென்று காளையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வனை பாராட்டி,‘புல்லட்’ காளைக்கு பட்டு வேட்டி அணிவித்தார்.

இதேபோல, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ‘புல்லட்’ காளையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுடன், அதன் உரிமையாளர், பராமரிப்பாளர்களுக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காளையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: ஜல்லிக்கட்டின் மீதான ஆர்வத்தில் கடந்த40 ஆண்டுகளில் 800 காளைகளை பராமரித்துள்ளேன். தற்போது, புல்லட், அத்லட், அன்பு, வெள்ளை, விரும்பன், போக்குக்காட்டி, மொட்டுவால், பெரியவர், கரிகாலன், மதுரைவீரன், விருமாண்டி, பீமா, பூந்திக் குட்டை உள்ளிட்ட 27 காளைகளை பராமரித்து வருகிறேன்.

தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து ஜல்லிக்கட்டிலும் எங்களது காளைகள் பங்கேற்கும். அனைத்து இடங்களிலுமே பரிசுகளைப் பெறும். ஒவ்வொரு ஜல்லிக்கட்டுக்கும் நேரில் சென்று, பிடித்தகாளைகளை வாங்கி வந்து வளர்க்கிறேன். ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அதைத்தான் களத்தில் வெளிப்படுத்தும். நாம் நினைக்கிறபடி பயிற்சி அளித்து அந்தக் காளையை மாற்ற முடி யாது என்பது எனது கருத்து.

தற்போது அலங்காநல்லூரில் கார் பரிசை பெற்ற காளைதான், 2019-ல் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டில் புல்லட் பரிசு பெற்றது. இதனால், அந்தக் காளைக்கு ‘புல்லட்’ என்று பெயரிட்டோம். அலங்காநல்லூரில் வீரர்களை கலங்கடித்த இந்தக் காளையை நாங்கள் வளர்க்கும் நாய்க்குட்டியே அவ்வப்போது ஓட்டிச் செல்லும். அந்த அளவுக்கு பாசமாக இருக்கக்கூடியது ‘புல்லட்’ காளை.

காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், டோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்த்துவிட்டால், யாரும் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாது. அதிக காளைகளையும் அவிழ்த்துவிட முடியும். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x