முழு ஊரடங்கு நாளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு
சென்னை: முழு ஊரடங்கு நாட்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து, சிறப்பாகப் பணியாற்றிய போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானத்துடன் பணி
இதுகுறித்து டிஜிபி கூறும்போது, “முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட போதும், போலீஸார் பொறுப்புடன் பணியாற்றினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். காவலர்களை சிலர் தாக்கியபோதும்கூட, துறைக்குரிய பொறுப்புடனும், மனிதாபிமானத்தோடும் சில போலீஸார் பணியாற்றினர். அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் ரோந்து சென்று, பொதுமக்களுக்கு தக்கஅறிவுரை வழங்கியது, துறைமீதான நம்பிக்கையை வலுப்படுத் தியது.
முழு ஊரடங்கின்போது, வெளியூர் சென்று திரும்புவோர் அவதிப்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முழுஊரடங்கின்போது ரயில், பேருந்துநிலையத்திலிருந்து வந்து திரும்புவோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.எனவே, இனி வரும் முழு ஊரடங்குநாட்களில், அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்கும் வகையில் வசதி செய்துதரப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
