

சென்னை: நாடு முழுவதும் உள்ள சட்டப் பல்கலைக்கழகங்களில் எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவுமாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மத்தியகல்வி அமைச்சர், மத்திய சட்டம்மற்றும் நீதித் துறை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், நாடு முழுவதும் உள்ள சட்டப் பல்லைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களில், அரசியலமைப்பு சட்டப்படியிலான இடஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.லக்னோ மற்றும் கொச்சியில் உள்ளதேசிய சட்டப் பள்ளிகளில், மாநில இட ஒதுக்கீட்டு முறை சரியாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால், மற்றமாநிலங்களில் உள்ள சட்டப் பல்கலை.கள் மற்றும் தேசிய சட்டப் பள்ளியில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான அகில இந்திய மற்றும் மாநில அளவிலான இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை.
திமுக முன்னெடுத்த சட்டப் போராட்டம் காரணமாக, மருத்துவபட்டப் படிப்புகளில் அகில இந்தியஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீட்டுக்காக யாராவது வழக்குத் தொடரட்டும் என்று காத்திருக்காமல், சட்டப் படிப்பிலும் எஸ்.சி., எஸ்.டி.மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு கடிதத்தில் வலி யுறுத்தியுள்ளார்.