Last Updated : 19 Jan, 2022 06:16 AM

 

Published : 19 Jan 2022 06:16 AM
Last Updated : 19 Jan 2022 06:16 AM

மருத்துவர் வி.சாந்தா முதலாம் ஆண்டு நினைவு தினம்: புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா, 2021-ம் ஆண்டு ஜன.19-ம் தேதி சென்னையில் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் புற்றுநோய் சிகிச்சைக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்த அவர், அடையாறு மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக உருவாக்கியதில் பெரும்பங்காற்றினார். பத்ம, பத்மபூஷண், பத்மவிபூஷண், அவ்வையார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகளின் மூலம் கிடைக்கும் தொகையை மருத்துவமனையின் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார்.

எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்

1952-ம் ஆண்டு 12 படுக்கை, 2 மருத்துவர்கள், 2 செவிலியர்களுடன் தொடங்கப்பட்ட மருத்துவமனை இன்று 650 படுக்கைகளுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் என 1,000 பேருடன் மிகவும் பிரமாண்டமாக வளர்ச்சிப் பெற்றுள்ளது. 65 ஆண்டுகளாக பழைய புற்றுநோய் மருத்துவமனையின் மாடியில் சிறிய அறையில் தங்கி எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், லட்சக்கணக்காண புற்றுநோயாளிகளுக்கு தரமான,குறைந்த கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தார்.

புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை முறைகளையும் கொண்டுவந்தார். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த அவர், புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

மருத்துவர்களுக்கு வழிகாட்டி

சர்வதேச அளவில் புற்றுநோய் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தில் புற்றுநோய் தொடர்பான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர், புற்றுநோய் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அளவில் சுகாதார குழுக்களில் பணியாற்றியுள்ளார். பல மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் முழுமையாகக் குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்திய மருத்துவர் வி.சாந்தாவின் மறைவு தமிழக மருத்துவத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு.

இதுதொடர்பாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஜி.செல்வலட்சுமி கூறியதாவது:

அடையாறு புற்றுநோய் மையம் பல மைல்கல்களைத் தாண்டி 65 வருடங்களுக்கும் மேலாக புற்றுநோயாளிகளின் நலனுக்கு பாரம்பரியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றால் அது மருத்துவமனையின் தலைவர் வி.சாந்தாவின் உன்னதமான உழைப்பால்தான்.

நம்பிக்கையை பதிய வைத்தவர்

புற்றுநோய் என்றால் மரணம் என்ற கருத்தை மாற்றி, புற்றுநோய் வந்த பலருக்கு இயல்பு வாழ்க்கை உண்டு என்பதை மனதில்ஆணித்தரமாக பதியவைத்து, தன்னம்பிக்கையோடும், தைரியத்துடனும், நேர்மையுடனும் பணியாற்றி, புற்றுநோய்க்கு எதிராக வெற்றி கண்டு, நோயாளிகளுக்கு உலகத்தரமான சிகிச்சை முறையை அதிக செலவில்லாமல் செயல்படுத்த முயன்றவர்.

புற்றுநோய் சிகிச்சை என்று ஒரே முகமாகசெயல்படாமல் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது, புற்றுநோய் விளைவிக்கக் கூடிய காரணங்களைத் தெரிந்து அவற்றை தடுப்பது போன்ற பல கோணங்களில் புற்றுநோயை அணுகினார். புகையிலை உபயோகத்தை தடை செய்வதில் அரசுடன் இணைந்து செயல்பட்டார்.

புற்று நோய் பற்றிய ஆராய்ச்சி முறைகளை செயல்படுத்தி மேலும் தரமான சிகிச்சைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக புற்றுநோய் உயர்கல்வி சிகிச்சை படிப்பான ‘எம்சிஎச்’ அறுவை சிகிச்சை மற்றும் ‘டிஎம்’ மருந்தியல் சிகிச்சை இரண்டையும் முதன்முதலில் இந்தியாவில் ஆரம்பித்து வைத்தார். புற்றுநோயாளிகளின் குடும்பத்தில் ஒருவராகவே மாறியவர்.

நீதி நெறிமுறை தவறாதீர்கள்

புற்றுநோயாளியின் முகத்தில் தெரியும் புன்னகையையும், சந்தோஷத்தையுமே தன் சந்தோஷமாக நினைத்து, புற்றுநோய் மையத்திலேயே 93 வயது வரை வாழ்ந்தவர்.

எங்கள் குருவாக அவர் பேசும்போது, நோயாளியுடன் எப்படி பேச வேண்டும், சொல்லப்பட வேண்டியவை என்ன, சொல்லக்கூடாதவை என்ன என்பதில் கவனம்செலுத்தச் சொல்வதுடன், நீதி நெறிமுறைகளிலிருந்து என்றும் நழுவாதீர்கள் என்றும் வலியுறுத்திக் கூறுவார்.

அவருடன் பயணித்த மருத்துவர்கள் அவர் செயல்பாடுகளை இன்றும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அடுத்து வரும்காலகட்டங்களிலும் கூட அவர் காட்டிய வழியிலே அடையாறு புற்றுநோய் மருத்துவர்கள் செயல்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படிப்பட்ட பெருமைக்குரியவர், இன்றுநம்முடன் இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற சந்தோஷத்தோடு, அவர்இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான்இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துவதாக அவர் கொள்கைகளையும், செயல்முறைகளையும் விடாது நடைமுறைப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x