Published : 19 Jan 2022 08:11 AM
Last Updated : 19 Jan 2022 08:11 AM

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் குளறுபடி: முதல்வரின் தனிப் பிரிவில் தேர்வர்கள் புகார்

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான இரு வேறு பாடத் தேர்வுகளில் ஒரே வினாக்கள் இடம்பெற்றதாக முதல்வரின் தனிப் பிரிவில் தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017-ம் ஆண்டு நிலவரப்படி காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த டிச.8 முதல் 12-ம் தேதி வரை கணினி வழியில் நடந்தது. இதில், டிச.10-ம் தேதி வேதியியல் பாடம், 12-ம் தேதி மின்னணுவியல், தகவல் தொடர்பு பொறியியல் (இசிஇ) பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

2 தேர்வுகளில் ஒரே கேள்வி

வெவ்வேறு நாட்களில் நடைபெற்ற இந்த 2 பாடங்களுக்கான தேர்வில் பொது அறிவு வினாக்கள் பிரிவில் ஒரே மாதிரியாக 10 வினாக்கள் இடம்பெற்றதாக தேர்வர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து முதல்வரின் தனிப் பிரிவுக்கு தேர்வர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்வுக்கான விடைக்குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் வேதியியல், இசிஇ ஆகிய இரு வேறு பாடங்களுக்கான தேர்வில் பொது அறிவு பிரிவில் ஒரே மாதிரியாக 10 வினாக்கள் இடம்பெற்றது கண்டறியப்பட்டது.

தனியார் மையங்களுக்கு..

தனியார் பயிற்சி மையங்களுக்கு சாதகமாக இந்த வினாத்தாள் வடிவமைக்கப்பட்டதோ என சந்தேகம் எழுந்துள்ளது.

அரசுப் பணிக்கான தேர்வில் தேர்வர்கள் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, வினாத்தாள் குளறுபடி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, எந்த ஒரு தேர்வருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 2 முறை..

இதற்கிடையே, கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகளால் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஏற்கெனவே 2 முறை தள்ளிவைக்கப்பட்டு, கடந்தடிசம்பரில் நடத்தி முடிக்கப்பட்டது.

தற்போது, தேர்வில் மீண்டும் குளறுபடி நடந்திருப்பதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து, நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x