

சென்னை: திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவில் கடந்த 2017-ல்தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டது. அணியின் செயலாளராக நியமிக்கப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பங்கள் மூலம்திமுகவின் வெற்றிக்கு பங்காற்றினார். தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, பழனிவேல் தியாகராஜனுக்கு நிதிஅமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டதால், கட்சிப் பணியில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்பட்டது.
இந்த சூழலில்தான், தன்னுடைய கட்சிப் பதவியை பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அவரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக பணியாற்றி வந்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், திமுக தலைவரிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக திமுக தொழில்நுட்ப அணி செயலாளராக டிஆர்பி ராஜா எம்எல்ஏ நியமிக்கப்படுகிறார்
அயலக அணிச் செயலாளராகபணியாற்றி வந்த டிஆர்பி ராஜாவுக்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, அயலக அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.