கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் பாய்ந்து வந்த காளைகள்; மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு: நவலூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் மரணம்

கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் வீரர்களை பந்தாடிய முரட்டுக் காளை.
கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் வீரர்களை பந்தாடிய முரட்டுக் காளை.
Updated on
1 min read

சிவகங்கை/திருச்சி: சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் மத ஒற்றுமையை போற்றும் அந்தோணியார் திருவிழாவை காண வந்தோருக்கு கிராம மக்கள் போட்டி போட்டு விருந்தளித்து உபசரித்தனர். தொடர்ந்து நடந்த மஞ்சுவிரட்டில் 600 காளைகள் பங்கேற்றன. இதில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 80 பேர் காயமடைந்தனர்.

கண்டிப்பட்டியில் ஆண்டுதோறும் தை 5-ம் நாள் அந்தோணியார் திருவிழா, மஞ்சுவிரட்டு நடக்கிறது. இந்த ஆண்டு நேற்று நடந்த விழாவில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் இணைந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர். மேலும் திருவிழா, மஞ்சுவிரட்டைக் காண வந்த வெளியூர் மக்களுக்கு கிராம மக்கள் போட்டி போட்டு விருந்தளித்தனர்.

தொடர்ந்து தொழுவில் இருந்த காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். பிற்பகலில் கோயில் காளை அவிழ்க்கப்பட்டதும், மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன. மொத்தம் 138 காளைகள் பதிவு செய்யப்பட்டபோதும், 73 காளைகளே அவிழ்க்கப்பட்டன. 30 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

மஞ்சுவிரட்டின்போது, பாதுகாப்பு தடுப்புகள் சரிந்து 3 பேர் காயமடைந்தனர். முன்னதாக கண்மாய் பொட்டல், புன் செய் நிலப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடு முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 20 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பாகனேரியைச் சேர்ந்த மலைச்சாமி (52) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நவலூரில் ஒருவர் உயிரிழப்பு

இதேபோன்று, திருச்சியை அடுத்த நவலூர் குட்டப்பட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி இளைஞர் உயிரிழந்தார்.

குட்டப்பட்டு கிராமத்தில் அடைக்கல அன்னை ஆலயம் முன் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 510 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 380 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் 46 பேர் காயமடைந்தனர். இதில், களத்தில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதியில் நின்று கொண்டிருந்த, அதே பகுதியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்த வினோத்குமார் (29), என்பவரை காளை முட்டியது. இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in